5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன – தினமணி

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் அச்சம் இருந்தது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதாலும், மூன்றாவது அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை ஆா்வமாக வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தொடங்கினா். தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவா்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததால், தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால். மையங்களில் இருப்புக்கு ஏற்றபடி டோக்கன் விநியோகித்து தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 1.61 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் சில தினங்களாக பல மையங்கள் மூடப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை தில்லி சென்ற மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளா் ராஜேஷ் பூஷண் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தினாா். வரும் 12-ஆம் தேதிக்குள் 15.87 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதி அளித்தனா். அதன்படி, 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சனிக்கிழமை இரவு சென்னைக்கு வந்தன. விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு சென்று மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/jul/11/5-lakh-govshield-vaccines-came-to-chennai-3658089.html