சென்னை முதல் காரைக்கால் வரை விரைவில் பயணிகள் படகு போக்குவரத்து சேவை.. – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை முதல் காரைக்கால் வரை படகு போக்குவரத்தை விரைவில் தொடங்க சென்னை துறைமுக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

சென்னை,

சென்னையில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் வரை பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகம் திட்டமிட்டு வருகிறது. பயணிகளை படகுகளை ஈர்க்கும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவைக்கான பணிகள் தொடங்கி உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் சிறு துறைமுகங்கள் அதிகமுள்ளதால் இந்த படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேர் பயணம் செய்யும் வகையில் படகு போக்குவரத்து திட்டமிடப்பட்டுள்ளது. கடல் வழி பயணத்தில் இயற்கை அழகையும் கடற்கரையோர நகரங்களை ரம்மியமாக ரசித்தவாறு படகுப் போக்குவரத்து அமையும் என்பதால் சுற்றுலாப்பயணிகளும் இந்த படகு போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது

படகு போக்குவரத்து சேவைக்காக சென்னை–காரைக்கால் இடையே உள்ள சிறு துறைமுகங்களை அழகுபடுத்தும் பணியும் ஆழப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பயணிகளிடம் இருந்து படகு போக்குவரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இத்திட்டம் மற்ற கடற்கரை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/07/21165115/Passenger-ferry-service-from-Chennai-to-Karaikal-soon.vpf