மெட்ராஸ் ஐ.ஐ.டி.க்கு ‘சென்னை ஐ.ஐ.டி’ என பெயர் மாற்றும் திட்டம் இல்லை: மத்திய அரசு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மெட்ராஸ் ஐ.ஐ.டி.க்கு, சென்னை ஐ.ஐ.டி. என பெயர் மாற்றும் திட்டம் இல்ைல என மத்திய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது.

மெட்ராஸ் ஐ.ஐ.டி.

தமிழ்நாட்டின் தலைநகரான மெட்ராஸ் நகருக்கு ‘சென்னை’ என கடந்த 1996-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் சில அரசு நிறுவனங்கள் இன்னும் மெட்ராஸ் என்ற பெயரிலேயே இயங்கி வருகின்றன.இதில் சென்னையில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யும் ஒன்று. மெட்ராஸ் ஐ.ஐ.டி. என இருக்கும் இந்த நிறுவனத்தின் பெயரை, சென்னை ஐ.ஐ.டி. என மாற்றம் செய்ய வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கைகள் உள்ளன.ஆனால் சென்னை ஐ.ஐ.டி. என பெயர் மாற்றும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம் பதிலளித்து இருந்தார்.அதில் அவர் கூறுகையில், ‘இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்-க்கு (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) பெயர் மாற்றம் செய்யும் எந்த பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்திய உயர்கல்வி ஆணையம்

இதைப்போல இந்திய உயர்கல்வி ஆணையம் உருவாக்குவது தொடர்பான வரைவு மசோதா தயாரிக்கும் பணிகளில் கல்வி அமைச்சகம் ஈடுபட்டு இருப்பதாக மற்றொரு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 29-ந்தேதி புதிய கல்விக்கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. ஒழுங்குமுறை, அங்கீகாரம், நிதி மற்றும் கல்வி தரநிலை அமைப்பு ஆகிய 4 தனித்துவமான செயல்பாடுகளை இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வர புதிய கல்விக்கொள்கை பரிந்துரைத்து இருந்தது. அதன்படி இந்த ஆணையத்துக்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கை பரிந்துரை

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) மற்றும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.) ஆகியவற்றுக்கு மாற்றாக இந்த இந்திய உயர்கல்வி ஆணையம் செயல்படும்.மருத்துவம் மற்றும் சட்டம் ஆகியவற்றை தவிர்த்த பிற உயர்கல்வி அமைப்புகளை இணைத்து இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்க புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dailythanthi.com/News/India/2021/07/26233306/No-bid-to-rename-IIT-Madras-as-IIT-Chennai-informs.vpf