அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செத்ய்திக்குறிப்பில், கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்களின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலபடுத்தி, மறுசீரமைப்பு செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு கூவம் நதியோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசித்து வரும் குடும்பங்கள் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
நீர்நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் என கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 93 ஆக்கிரமிப்பு குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதையும் படிக்கலாமே குடியரசுத்தலைவர் வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமலும்,  சுகாதாரமான சுற்று சூழல் இல்லாமலும் வசித்து வந்த பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் தற்போது வசிக்கும் பகுதிக்கு மிக அருகிலேயே திரு.வி.க நகர் மண்டலம், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே. பி. பார்க் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நவீன வீடுகளில் 31.07.2021 அன்று மறுகுடியமர்த்தபட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்டுள்ள 93 குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இராதாகிருஷ்ணன் நகர் கூவம் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து கே. பி. பார்க் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு கொண்டு செல்ல தேவையான வாகன வசதிகளும், 31.07.2021 அன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 93 குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் மூன்று வேளையும் தரமான உணவு மாநகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால்  அடித்து செல்லக்கூடிய அபாயகரமான இடத்திலிருந்து இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பாக
மீட்கபட்டுள்ளனர். மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக
மறுகுடியமர்த்தப்படுவார்கள்.
மேலும் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருக்கும் எஞ்சிய மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/aug/01/chennai-corporation-order-arumbakkam-demolish-occupations-3671653.html