பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை சீரமைக்க வேண்டும்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில், பழுதடைந்த கேமராக்களை சீரமைக்குமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்குமாறு, காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.இதையடுத்து, அனைத்து காவல் நிலைய போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக, சுழற்சி முறையில் 24 மணி நேர ரோந்துப் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் கைது

கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பொதுஇடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.

இதேபோல, சில விபத்துகளின் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ள கண்காணிப்புக் கேமராக்கள் போக்குவரத்து போலீஸாருக்கு பெரும் உதவியாக உள்ளன.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக போதிய பராமரிப்பின்றி பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த பல கண்காணிப்புக் கேமராக்கள் செயலிழந்தன. இதனால், பல இடங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சென்னையில் பொது இடங்களில் மொத்தம் எத்தனை சிசிடிவி கேமராக்கள் உள்ளன? அவை எங்கெங்கு உள்ளன? எந்தப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன? உள்ளிட்ட விவரங்களைக் கேட்டதுடன், பழுதடைந்த கேமராக்களை உடனடியாக சீரமைக்குமாறு காவல் கூடுதல்ஆணையர்கள் என்.கண்ணன் (தெற்கு), செந்தில் குமார் (வடக்கு), பிரதீப் குமார் (போக்குவரத்து) ஆகியோருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பழுதடைந்த சிசிடிவி கேமராக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/700493-chennai-police-commissioner.html