சமூகப் பணி: 7 தனி நபர்கள், நிறுவனங்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆஃப் சென்னை’ விருதுகள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சமூகப் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆஃப் சென்னை’ விருதுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக, கேஎஸ்ஏ அறக்கட்டளை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கேஎஸ்ஏ அறக்கட்டளை வழங்கும் ‘சென்னை சாம்பியன்’ விருதுகள் தொடர்ந்து 8-வது ஆண்டாக ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை வழங்கப்பட்டன. காணொலி வாயிலாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தலைமை விருந்தினராக மயிலாப்பூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஐபிஎஸ் அதிகாரியுமான ஆர்.நடராஜ் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

சென்னை சாம்பியன்ஸ் 2021-ம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற்ற தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் விவரம்:

1. கலை & கலாச்சாரம் – அனில் ஸ்ரீனிவாசன்: இசையில் இவருக்குள்ள அபரிமித ஈடுபாடு மற்றும் இசையின் மூலமான மகிழ்ச்சியை அனைவருக்கும் பரப்புவதில் இவருக்குள்ள அதீத பொறுப்புணர்வு, இசையின் மூலமாகப் பலரது மேம்பாட்டுக்கு உதவும் இவரது பணியைப் பாராட்டி வழங்கப்பட்டது.

2. கல்வி – சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.ஹெச். சாலை: மாணவிகளை சுதந்திரமாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும், இக்கட்டான தருணத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையிலும் தொடர்ந்து உருவாக்கி வருவதால் விருது வழங்கப்பட்டது.

3. சுகாதாரம் – இம்ப்காப்ஸ், கூட்டுறவு அமைப்பு: இது தொடர்ந்து நமது பாரம்பரிய மருந்துகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாரம்பரிய மருத்துவத்தை மிகவும் எளிய முறையில் நவீனக் கிடங்குகளில் சேமித்து ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துகள் கிடைக்க வழி செய்கிறது. இதனால் இம்ப்காப்ஸ் அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது.

4. அறிவியல் – ஜான் தங்கச்சன்: தரமான ஆடியோ சாதனங்கள் உற்பத்தி செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு இந்தியத் தயாரிப்புகளைப் பன்னாட்டுத் தயாரிப்புகளுக்கு இணையாகத் தயாரிப்பவர். இவரது தொடர் முயற்சியால் இசைப் பிரியர்களுக்கு மிகவும் தரமான இசையைக் கேட்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.

5. சமூகப் பங்களிப்பு – சகோதரன்: மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கை (பெண்கள்) மற்றும் ஒரே பாலினத்தவர் (ஆண்கள்) இரு தரப்பினருடனும் உறவு கொள்வோர் ஆகியோருக்காக மிகச் சீரிய பணியை மேற்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இப்பிரிவினரும் வாழ நம்பிக்கை உருவாக்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

6. சமூகப் பங்களிப்பு – அருண் கிருஷ்ணமூர்த்தி: இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர். நீர் நிலைகளைச் சுத்தப்படுத்துவதில் தொடர்ந்து பாடுபட்டு வருபவர். சுற்றுலா மற்றும் மலையேற்றப் பயிற்சி, கதை சொல்வது உள்ளிட்டவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக விருது வழங்கப்பட்டது.

7. விளையாட்டு – மாதவி லதா: மிகவும் மோசமான சூழலிலும் தனக்கான வாழ்க்கையைத் தீர்மானித்து அதில் இலக்கை எட்டப் பாடுபட்டவர். இவரது அயராத முயற்சியால் உருவானவைதான் தமிழ்நாடு தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் சங்கம், இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து சம்மேளனம்.

2013-ம் ஆண்டு முதல், கேஎஸ்ஏ அறக்கட்டளை 45 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சாம்பியன்ஸ் ஆஃப் சென்னை விருது வழங்கியுள்ளது. இவர்கள் அனைவருமே கலை, கலாச்சாரம், கல்வி, தொழில் முனைவு, சுகாதாரம், அறிவியல், சமூகப் பங்களிப்பு மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களாவர். இவர்களது சிறப்புப் பணிகள் அடங்கிய இ-புத்தகத்தை தலைமை விருந்தினர் நிகழ்ச்சியின்போது வெளியிட்டார்.

இந்த விருது வழங்குவதன் நோக்கமே இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று இதன் மூலம் வளரும் இளம் சமூகத்துக்கு தங்களுக்கான முன்மாதிரி நபர்களை அடையாளம் காட்டுவதாகும். அதேசமயம் இவர்கள் செய்து வரும் அரிய பணியைத் தொடர்ந்து செயல்படுத்த ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் இது விளங்கும்”.

இவ்வாறு கேஎஸ்ஏ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/706659-champions-of-chennai-awards.html