பட்டாணி சுண்டல் முதல் இரவு நேர குல்பி ஐஸ் வரை – ருசியால் கட்டிப்போடும் சென்னை மாநகரம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மெட்ராஸ் மாறி சென்னை என்று ஆனாலும் தலைநகரின் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் ருசியான சிற்றுண்டிகள் பலருக்கு பிடித்தமானவை. 382வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னையில் கடற்கரை விற்பனை செய்யப்படும் பட்டாணி சுண்டல், சாட் உணவுகள், ருசியான பஜ்ஜிகளை சாப்பிட்டே பலரது வயிறு நிரம்பி விடும்.

வந்தரை வாழ வைக்கும் சென்னை பெருநகரத்தில் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் வசிப்பதால் பல வித உணவுகளையும் இங்கே ருசிக்கலாம். மயிலாப்பூர் மாட வீதிகளில் கிராமங்களில் கிடைக்கும் கமர்கட் முதல் ரவாலட்டு வரைக்கும் ருசிக்கலாம். விதம் விதமான உணவை மக்கள் ருசிக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் 3 நாட்கள் ‘மயிலாப்பூர் டேஸ்’ திருவிழா கொண்டாடுவார்கள். தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உணவுகளையும் ஒரே இடத்தில் ருசிக்கலாம். அதற்காகவே திருவிழாவை ரசிக்க வருவார்கள். பங்குனி மாதத்தில் அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் கடைவீதி களைகட்டும்.

சென்னைப்பட்டணம் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு மெட்ராஸ் ஆக மாறி பின்னர் மீண்டும் சென்னையாக மாறியது. பெயர் மாறினாலும் மனிதர்கள் மாறுவதில்லை அவர்கள் தயாரிக்கும் உணவின் ருசியும் மாறுவதில்லை. பல நூற்றாண்டு கால வரலாறு கொண்ட சென்னைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அங்குள்ள சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள், சாட் உணவுகளின் ருசி அலாதியானது.

பானி பூரி, பேல் பூரி, தயிர்பூரி, பாவ் பஜ்ஜி, வடை பாவ்,சமோசா, கட்லெட் , சன்னா மசாலா என இந்தியாவின் பல பகுதிகளில் பிரபலமாக விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான சாட் சிற்றுண்டிகளையும் சென்னையில் உள்ள சாலையோர கடைகளில் நாம் ருசிக்க முடியும். கால மாற்றத்தினால் பர்க்கர்,பீட்சா, சாண்ட் விச், சாலட் என விதம் விதமாக சாப்பிட்டாலும் சாட் உணவுகளின் சுவைக்கு ஈடு இணையில்லை என்றே சொல்ல வேண்டும்.

மெரீனா கடற்கரையில் காற்று வாங்க செல்பவர்கள் வறுத்த கடலை, வேக வைத்த பட்டாணி அதில் தேங்காய் மாங்காய் துருவல் சேர்த்த சுண்டல் சாப்பிடாமல் வீடு திரும்ப மாட்டார்கள். சுடச்சுட மக்காச்சோளம் வண்டிகளில் விற்றுக்கொண்டிருப்பார்கள் ஜில்லென்ற கடல் காற்றுக்கு இதமாக சில சோளக்கதிர்களை கொறித்து சாப்பிடுவார்கள் சிலர். தள்ளுவண்டி கடைகளில் விற்பனையாகும் சாட் உணவுகள், சென்னா மசாலா, பஜ்ஜி, வடைகள் என விதம் விதமாக மக்களின் டேஸ்டுக்கு ஏற்ப உணவின் வகைகளும் மாறும்.

மயிலாப்பூர் வீதிகளில் மாலை நேரங்களில் தள்ளு வண்டி கடைகளில் இரும்பு சட்டியில் தட்டிக்கொண்டே சுடச்சுட வறுத்த கடலை விற்றுக்கொண்டு வருவார்கள். ஒரு பொட்டலம் 5 ரூபாய்தான் சுடச்சுட வாங்கி சாப்பிட சுவை சும்மா அள்ளும்.

சில தள்ளுவண்டிகளில் அரிசி பொரியில் மசாலா சேர்த்து கார பொரியாக கொஞ்சம் வறுத்த கடலை, ஓமப்பொடி, மசாலா, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கொடுப்பார்கள். பொரியோடு துருவிய காரட், நறுக்கிய பெரிய வெங்காயம், சேர்த்து சாஸ் சேர்த்து, சில மசாலாக்களை டப்பாவில் கொட்டி கலந்து கொடுப்பார்கள். அடடா அப்படியே நாவில் ருசி இறங்கும்.

சென்னையில் பெயர்போன மற்றுமொரு உணவு பதார்த்தம் சென்னா மசாலா. சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு சென்னா மசாலா கடையை பார்க்க முடியும். அதே போல வேகவைத்த பட்டாணியில் மசாலா சேர்த்து அதில் பானி பூரி, சமோசா சேர்த்து சாஸ் சேர்த்து கலந்து கொடுப்பார்கள். மாலை நேரங்களில் 20 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். அவித்த கொண்ட கடலையுடன் சாஸ் சேர்த்து ஓமப்பொடி கலந்து கொடுக்கப்படும் உணவு காரமும் இனிப்பும் கலந்து தனி சுவையோடு இருக்கும்.

சென்னையில் சாட் வகைகளுக்கு நிகராக, மாலையில் அதிகம் விற்பனையாகும் மற்றுமொரு சிற்றுண்டி வடை, பஜ்ஜி. கடலைமாவு கலவையில் வாழைக்காய், வெங்காயம், குடை மிளகாய், உருளைக்கிழங்கு என பலவகை பஜ்ஜிகள் பிளேட்களில் கார சட்னி வைத்து கொடுப்பது தனி ருசி. கோபி 65 பொறித்தது தட்டு தட்டாக பறக்கும். ரோட்டோர கடைகளில் குட்டி மசால்வடை, ஆனியன் போண்டா, மெதுவடைக்கு என பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட வெங்காய சட்னி செம கூட்டணி. உருளைக்கிழங்கு கட்லெட் கூடவே சாஸ் சேர்த்து சாப்பிட்டால் அந்த ருசிக்கு ஈடு இணை ஏது.

காலமாற்றத்தினால் இப்போது சிக்கன் சவர்மா, ப்ரைட் ரைஸ், எக் ரைஸ் என சின்னச்சின்ன கடைகள் முளைத்திருந்தாலும் விலை குறைவான சாலையோர உணவுகளுக்கு என்று இப்போது ருசிப்பிரியர்கள் பலர் இருக்கிறார்கள்.

என்னதான் விதம் விதமாக கூல்டிரிங்க்ஸ்கள் பாட்டில் பாட்டிலாக விற்பனை செய்யப்பட்டாலும் விலை அதிகமாக ஐஸ்கிரீம்களை பார்லர்களில் விற்பனை செய்யப்பட்டாலும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் ரோஸ்மில்க், பாதாம் மில்க், ப்ரூட் மிக்சர், லஸ்சி, சர்பத், கடல்பாசி என குளுமை பிரியர்களுக்கு என கடைகள் ஆங்காங்கே கார்னர்கள் காத்துக்கொண்டிருக்கும்.

இரவு நேரங்களில் குல்பி குல்பி என சின்ன தள்ளுவண்டியில் மண்பானையை வைத்துக்கொண்டு கிணி கிணி சத்தத்தோடு விற்றுக்கொண்டு குல்பி ஐஸ்காரருக்காக பலர் உறங்காமல் காத்திருப்பார்கள். நன்றாக காய்ச்சிய பாலுடன் முந்திரி, பாதம், பிஸ்தா கலந்து அதை குல்பி அச்சில் ஊற்றி கேட்பவர்களுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொடுக்கும் காசுக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாக எடுத்துக் கொடுத்து பலரது மனங்களை குளிர்வித்து விடுவார் குல்பி ஐஸ்காரர்.

இப்படி சென்னையில் விற்பனையாகும் எத்தனையோ ருசியான உணவுகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நான் ருசித்து சாப்பிட்ட சில சிற்றுண்டிகள் சிலவற்றை எழுதியிருக்கிறேன். சென்னையில் உங்களுக்கு பிடித்தமான சிற்றுண்டிகள் விடுபட்டு போயிருந்தால் அதை கமெண்ட் பாக்சில் குறிப்பிடுங்கள் ருசிப்பிரியர்களே.

English summary
Madras has changed to Chennai but the delicious snacks sold in the roadside shops of the capital are a favorite of many. Celebrating the 382nd birthday in Chennai, many people will have their stomachs full after eating the pea chutney, chaat dishes and delicious pajjis sold at the beach.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-382-pattani-sundal-and-gulfi-chennai-street-foods-430628.html