சென்னையில் இதுவரை 40 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது – சுகாதாரத்துறை தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இதுவரை மொத்தம் 40 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் மொத்தம் 3 கோடி டோஸ்களை கடந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் 74 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, இதுவரை 40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 49 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 23 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கும் பட்சத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்துதல், வார்டு வாரியாக தடுப்பூசி முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

பொதுமக்கள் தயக்கம் இன்றி தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/01223123/40-lakh-dose-vaccines-administered-in-Chennai-Health.vpf