சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் – சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் சித்த பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, ” தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளாக சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் அமைக்கப்படும். சித்த பல்கலை.யில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகாவும் இடம்பெறும்.

மேலும், தமிழகத்தில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.266.73 கோடியில் அமைக்கப்படும். 

ரூ5.10 கோடியில் 17 புதிய ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்கப்படும்.  ரூ.69.18 கோடியில் கூடுதலாக 188 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். 

முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,248 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு விரிவாக்க செய்யப்படும்.

ரூ.4,280 கோடியில் வட்டார மருத்துவமனைகள், நகர்புற மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.  மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் ரூ.258 கோடியில் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். 

ரூ.70 கோடியில் 389 நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் வாங்கப்படும்.  ஊரடகப்பகுதிகளில் 2,400 துணை சுகாதார நிலையங்கள் ரூ.35.52 கோடியில் மேம்படுத்தப்படும்.  முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும். 

43 அரசு மருத்துவமனைகளில் ரூ.97.49 கோடியில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படும். கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.

2,448 சுகாதார ஆய்வாளர்களும் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள்.  அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் மறதி நோய்க்கான சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை டி.எம்.எஸ். வளாக ஆய்வகத்தில் ரூ4 கோடியில் மரபணு பகுப்பாய்வுகூடம் அமைக்கப்படும்.  எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தடுப்பு ஆதரவு பராமரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.128.27 கோடி ஒதுக்கப்படும் என்றார்.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/02152419/Siddha-Medical-University-near-Chennai.vpf