Madras Day: வந்தாரை வாழ வைத்து.. செல்ஃபி நினைவுகளுடன் சென்ட்ஆஃப் கொடுக்கும் கம்பீர சென்னை! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்
Comprehensive Story

சென்னை: வந்தாரை வாழ வைத்து.. செல்ஃபியில் நினைவுகளை சுமந்து செல்வோருக்கு சென்ட்ஆஃப் கொடுத்து.. பேரிடர்களில் கலங்காமல் நம்மை காத்து.. கம்பீரமாக காட்சி தரும் சென்னை இன்று தனது 382-வது பிறந்த நாளை மக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.

Chennai என்றாலே பிடிக்கும் | மக்களின் காதலன் சென்னை | Chennai day special | Oneindia Tamil

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்ப நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களிடமிருந்து, தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை, கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஃபிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் கடந்த 1639- ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி வாங்கினர். அந்த இடம் படிப்படியாக வளர்ந்து தற்போது சென்னை மாநகரமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. நாயக்க சகோதரர்களிடமிருந்து இடம் வாங்கப்பட்ட தினத்தை சென்னை மாநகரின் பிறந்த நாளாக, 2004-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம். 382 முடிந்து 383-ல் அடியெடுத்து வைக்கிறது.

சென்னை-னு சொன்னாவே.. மெரினா பீச்.. லைட் அவுஸ்.. அண்ணா சமாதி.. அப்புறம் சென்ட்ரல் ஸ்டேஷன்.. மியூசியம்..கிண்டி நேஷ்னல் பார்க்.. இதெல்லாம் தாங்க முதல்லே ஞாபகத்துக்கு வரும்.. இத மாதிரி நெறய இடம் இருக்கு.. எல்லாத்துக்குமே தனி..தனியா ஹிஸ்டரி இருக்கு.. அதில் சென்னையின் அடையாளமாக திகழும் சில இடங்கள்…

மெரினா கடற்கரை: 2004-ல் சுனாமி பேரிடரை சந்தித்து.. 2017-ல் ஜல்லிக்கட்டு புரட்சி நடந்த இடம் மெரினா கடற்கரை. 1875-ல் துறைமுகம் கட்டப்பட்ட போது, வங்க கடலை தடுத்து சுவர் எழுப்பப்பட்டது. அப்போதிலிருந்து 40 சதுர கிலோமீட்டர் தூரம் மணல் குவிய, களிமண் தொகுப்பாக இருந்த பகுதியின் நீளம் அதிகமானது. 1881-ம் ஆண்டு மதராஸ் கவர்னராக இருந்த மவுன்ட் ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்டஃப், மணல் குவியலை பார்த்து, அதை உலாவும் சாலையாக மாற்ற நினைக்க, அப்படி உருவானதுதான் மெரினா கடற்கரை. இத்தாலி நாட்டின் புகழ் பெற்ற பால்மரோ கடற்கரையின் பெயரை நினைவூட்டும் விதமாக மெட்ராஸ் மெரினா என பெயர் சூட்டப்பட்டு நாளடைவில் மெரினாவாக மாறியது.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை: தமிழக அரசின் தலைமை செயலகமாக புனித ஜார்ஜ் கோட்டை தற்போது செயல்பட்டு வருகிறது. 1639-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளால் வாங்கப்பட்ட இடத்தில், 1640-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. புனித ஜார்ஜ் என்பவரின் பிறந்த நாளில் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட காரணத்தால் அவருடைய பெயரே கோட்டைக்கு சூட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு பிறகு தமிழக அரசின் தலைமை செயலகமாக கம்பீரமாக காட்சி தரும் கோட்டையின் மதிற் சுவர்கள் பிரமிம்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. எதிரிகள் எளிதில் உள்ளே நுழைந்து விட முடியாதபடி கோட்டையை சுற்றிலும் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளுமை மிக்க பல்வேறு முதல்வர்களை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த பெருமைக்குரிய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து விரைவில் இந்தியாவை ஆளும் ஒரு ஆளுமை மிக்க தலைவர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நேப்பியர் பாலம் : செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் இருந்த நரிமேடு என்ற குன்று அகற்றப்பட்டு, 1869-ம் ஆண்டு மெட்ராஸ் கவர்னராக இருந்த ஃப்ரான்சிஸ் நேப்பியர் என்பவரால் பாலம் கட்டப்பட்டது. பின்னர் அவரது பெயரே பாலத்துக்கு சூட்டப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையையும், மெரினாவையும் இணைக்கும்படி கூவம் நதியின் மீது 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் அமைந்துள்ள, மிகவும் பழமையான பாலம்.

கன்னிமாரா பொது நூலகம்: கன்னிமாரா பொது நூலகத்தின் வரலாறு 1860-ம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகிறது. அன்றைய பிரிட்டிஷ் அரசின் மதராஸ் மாகாணத்தில் இருந்த மதராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு சிறு பகுதியாக, கேப்டன் ஜீன் மிட்செலால் என்பவரால், சிறிய நூலகம் தொடங்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் எய்லிபரி கல்லூரி நூலகத்தில் தேவைக்கு அதிகமாக இருந்த பல நூற்றுக்கணக்கான நூல்கள், மதராஸ் மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவையனைத்தும், மதராஸ் அருங்காட்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய நூலகத்துக்கு வழங்கப்பட்டன. பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தின் மாதிரியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நூலகம், 1890-ம் ஆண்டு வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்தது. இந்நிலையில், அப்போது மதராஸ் மாகாண ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மதராஸ் மாகாணத்துக்காக தனியாக ஒரு பொதுநூலகம் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று உணர்ந்து, 1890-ம் ஆண்டு, மார்ச் 22-ம் தேதி நூலகத்துக்கான அடிக்கல்லை நாட்டி, பொதுநூலகத்துக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, 1896-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் நாள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நூலகம் திறந்து வைக்கப்பட்டது. நூலகம் திறக்கப்பட்டபோது, கன்னிமாரா பிரபு பணியில் இல்லை என்றாலும், அவருடைய முயற்சியால் நூலகம் உருவான காரணத்தால், அவருடைய பெயரே சூட்டப்பட்டது. அன்று முதல் இயங்கி வரும் கன்னிமாரா பொதுநூலகம், பெயருக்கு ஏற்றவாறு இன்னமும், பல்வேறு புத்தகங்களை உள்ளடக்கி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் பணியை தொடர்ந்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பிரிட்டானிய அரசால் இந்தியாவில் நிறுவப்பட்ட 3 நீதிமன்றங்களில் ஒன்றுதான் தற்போதைய சென்னை உயர் நீதிமன்றம். சென்னை ராஜதானி நகரத்துக்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் அளிக்கப்பட்ட காப்புரிமையின் அடிப்படையில் 1862-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி இது நிறுவப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு வந்த நிலையில், உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் உருவாக்கப்பட்டு, 1862 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் மெட்ராஸ் ஹை கோர்ட் என்று பெயர் மாற்றம் பெற்றது. இது தற்போதுள்ள கட்டிடத்துக்கு முன், கொய்யா தோப்பு என அழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் என்னும் இடத்தில் செயல்பட்டு வந்தது. உயர் நீதிமன்றத்துக்கு தனியாக கட்டிடம் வேண்டுமென பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் விடுத்த கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி அனுமதி அளித்த பிறகு தற்போதுள்ள நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரான மதராஸ் என்ற 1996-ம் ஆண்டு சென்னை என சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் பெற்றது. ஆனால் அதிலிருந்து விலக்கு பெற்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2016-ம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசின் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அன்று முதல் சென்னை உயர் நீதிமன்றம் என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வழக்குகள் இங்கு விசாரிக்கப்படுகின்றன.

அண்ணா நகர் டவர் பூங்கா: உலக வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக, பி.எஸ்.அப்துல் ரஹ்மான் என்பவரால் 1968-ம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னையில் உள்ள உயரமான பூங்கா கோபுரமான அண்ணா நகர் டவர் பூங்காவின் பரப்பளவு 15.35 ஏக்கர். இந்த பூங்காவின் நடுவில், 135 அடி உயரத்தில், 12 அடுக்குகளுடன் கூடிய கோபுரம் உள்ளது. அதன் உச்சிக்கு செல்ல, சுழல், சுழலான வளைவுகள் உள்ளன. சென்னை கார்ப்பரேஷன் மூலம் பராமரிக்கப்படும் இந்த பூங்காவில் ஒரு அரங்கம், பறவை காட்சியை கொண்ட டெக், பேட்மண்ட்டன் நீதிமன்றங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, சறுக்கு வளையம், ஒரு எரி, பார்வையாளர்களுக்கான வசதி ஆகியவை உள்ளன. முன்னாள் துணைதலைவர் வி.வி.கிரி, பேரறிஞர் அண்ணாவின் முன்னிலையில் பூங்காவை தொடங்கி வைத்தார் . அண்ணா நகர் டவர் பூங்கா, டாக்டர். விஸ்வேஸ்வரர் டவர் பூங்கா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஐஸ்ஹவுஸ் -விவேகானந்தர் இல்லம்: அமெரிக்காவின் தியூடர் ஐஸ் நிறுவனர் ஃப்ரடெரிக் தியூடர் என்பவர் 1842-ம் ஆண்டு இது கட்டப்பட்டது. சென்னையில் வசித்த வெளிநாட்டினரின் வெக்கையை தணித்து, குளிர்விப்பதற்காக, தியூடர் ஐஸ் கம்பெனியில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட பனிக் கட்டிகளை சேமித்து வைக்கும் இடமாக இருந்ததால் ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. 1874 வரை ஐஸ் சேமிப்பு கிடங்காக இருந்த இடத்தை, இந்தியாவில் ஐஸ் கட்டி தயாரிப்பு தொடங்கியதும், பில்கிரி ஐயங்காருக்கு தியூடர் ஐஸ் நிறுவனம் விற்று விட்டது. இந்த இடத்தை ஏழைகள், கல்வியறிவில் பின்தங்கியவர்களுக்கான கருணை இல்லமாக பில்கிரி ஐயங்கார் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் சிகாகோவில் உரையாற்றி விட்டு தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர், 1897-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்த கட்டிடத்தில் தங்கியிருந்தார். அப்போது புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை ஆற்றினார். இந்நிலையில், 1963-ம் ஆண்டு விவேகானந்தரின் பிறந்த நாள் நூற்றாண்டு சென்னையில் விமரிசையாக கொண்டாடப்பட்டபோது, அப்போதைய தமிழக நிதியமைச்சராக இருந்த பக்தவத்சலம், இந்த இடத்தை விவேகானந்தர் இல்லமாக அறிவித்தார்.

எழும்பூர் அருங்காட்சியகம் : எழும்பூர் மியூசியம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் இயங்கி வருகிறது. சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என மதராசு கல்வி கழகம் 1846-ம் ஆண்டு கோரிக்கை விடுத்தது. அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஹென்றி பாட்டிங்கர், கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இதற்கான அனுமதியை பெற்று, 1851 ஏப்ரல் 29-ம் தேதி அரசு அருங்காட்சியகம் திறந்து வைப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி கல்லூரி சாலையில் இருந்த செயிண்ட் ஜார்ஜ் கல்லூரியின் முதல் மாடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் விரிவடைந்ததையடுத்து, பாந்தியன் சாலையில் தற்போதுள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக பழமையான அருங்காட்சியகங்களுள் ஒன்றாக உள்ளது. பழங்கால மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் வீர வாள் உள்ளிட்ட ஆயுதங்கள், மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயம், விளையாட்டு, கலை தொடர்பான பொக்கிஷங்கள், பண்டைய காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் எலும்புகள், படிமங்கள், அறிவியல் ரீதியான பயன்பாட்டு பொருட்கள் என, மாபெரும் வரலாற்று சான்றாக எழும்பூர் அருங்காட்சியகம் காட்சி தருகிறது.

English summary
Here are the list of prides of Chennai during British rule.

Source: https://tamil.oneindia.com/here-are-the-list-of-prides-of-chennai-ahead-of-chennai-day-cs-430646.html