கடலில் தத்தளிப்பவர்களை காப்பாற்ற குழு – சென்னை காவல்துறை நடவடிக்கை – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கடலில் மூழ்கி தத்தளிப்பவர்களை மீட்க சிறப்பு குழு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சிறப்பு குழு அமைப்பதற்கான காரணம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு…

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட 2 வாரங்களில் மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.ஆண்டுக்கு சராசரியாக 90 பேர் வரை அலையில் சிக்கி உயிரிழக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் சூழலில், இதனை தடுக்க “கடற்கரை பாதுகாப்பு குழு” என்கிற சிறப்பு குழுவை அமைக்க சென்னை காவல்துறை தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் மெரினா கடற்கரையில் 25 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழு இயங்கி வருகிறது. 

ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், ஸ்கூபா நீச்சல் வீரர்கள், மிதவை படகு இயக்குபவர்கள் அடங்கிய இந்த குழுவினர், ஜார்ஜ் கோட்டை முதல் பட்டினப்பாக்கம் வரை மெரினா கடற்கரையில் பணியில் ஈடுபடுகின்றனர்.

ரோந்துப்பணி, விழிப்புணர்வு பணியிலும் இந்த குழுவினர் ஈடுபடும் நிலையில், ஆழம் மற்றும் ஆபத்தான பகுதிகள் குறித்த எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இத்தனை நடவடிக்கைகளையும் மீறி கடலில் குளிப்பவர்கள் உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், பன்முகத்தன்மை கொண்ட சிறப்பு குழுவை அமைக்க காவல்துறை தீர்மானித்துள்ளது.இந்த குழுவில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற காவலர்கள், கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறவுள்ளனர்.மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்பு மற்றும் ரோந்துப்பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், கடலில் தத்தளிப்பவர்களுக்கு ட்ரோன் மூலம்  உயிர் காக்கும் கவசம் கொண்டு சேர்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2021/09/07024703/2701441/NBC-Marina-rescue-team.vpf.vpf