சென்னை காவல் ஆணையரகம் பிரிப்பு? 2 அல்லது 3 ஆக பிரிப்பா?-முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இரண்டாக பிரிக்கப்பட்டது. 2 துணை ஆணையர்களை கொண்டு ஐஜி அந்தஸ்தில் ஆணையரைக் கொண்டு புறநகர் ஆணையரகம் அமைக்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் பழையபடி ஒரே ஆணையரகமாக சென்னை காவல் ஆணையரகத்தை அமைத்தார்.

சென்னை காவல்துறை ஏடிஜிபி அந்தஸ்த்தில் (சில நேரம் டிஜிபி அந்தஸ்து அதிகாரிகளும் பதவியில் இருந்துள்ளனர்) காவல் ஆணையர் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகத்தில் மிகப்பெரிய ஆணையரகம் சென்னை காவல் ஆணையரகம் தான்.

டிஜிபி அந்தஸ்து உள்ள அதிகாரிகள் காவல் ஆணையராக பதவி வகிக்கும் மிகப்பெரிய காவல் ஆணையரகமாகும். தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சங்கர் ஜுவால் ஆணையராக உள்ளார். சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு மட்டும் காவல் ஆணையருக்கு அடுத்து இரண்டு ஐஜி அந்தஸ்து அதிகாரிகள் சட்டம் ஒழுங்குக்காக கூடுதல் ஆணையர்களாக (வடக்கு-மேற்கு) (தெற்கு-கிழக்கு) உள்ளனர்.

ஜெர்மனி பெண் - ஆர்யா விவகாரத்தில் திருப்பம்.. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம்ஜெர்மனி பெண் – ஆர்யா விவகாரத்தில் திருப்பம்.. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம்

அவர்களுக்கு கீழ் டிஐஜி அந்தஸ்தில் 4 இணை ஆணையர்கள் உள்ளனர். அவர்களுக்கு கீழ் 12 துணை ஆணையர்கள், அவர்களுக்கு கீழ் வடக்கு மண்டலத்தில் 10, மேற்கு மண்டலத்தில் 12, தெற்கு மண்டலத்தில் 17 கிழக்கு மண்டலத்தில் 9 என மொத்தம் 48 உதவி ஆணையர்கள் உள்ளனர். அதற்கு கீழ், நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் என பெரிதாக விரிகிறது.

இரண்டாக பிரிக்கும் கோரிக்கை

சென்னை காவல்துறை மட்டுமே வருவாய் மாவட்டங்களைத்தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் வரை விரிந்து பரந்துள்ளது. தற்போது சென்னைக்குள் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிர்வாக காரணங்கள், காவல் எல்லை விரிவாக்கம் காரணமாக கவனிக்க முடியாமல் போவது, பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக சென்னையை இரண்டாக பிரித்து மீண்டும் புறநகர் ஆணையரகம் வருமா என்கிற கேள்வி எழுந்துக்கொண்டே உள்ளது.

இது தவிர சென்னைக்கு புறநகரில் அமைந்துள்ள தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியும் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அறிவிப்புக்கு ஏற்ப காவல்துறையையும் பிரிக்கலாம் என்கிற பரிந்துரை நெடுநாட்களாகவே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது சென்னையை பிரித்து கூடுதல் ஆணையரகம் அமைக்கும் பரிந்துரைக்கு இசைவு தெரிவித்ததாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு சென்னையை பிரிக்கும் முடிவை காவல்துறை மானிய கோரிக்கையின் கீழ் இன்று முதல்வர் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 ஆக பிரிப்பா 3 ஆக பிரிப்பா?

அவ்வாறு அறிவிப்பு இன்று வெளியானால் அது எப்படி இருக்கும் என்கிற தகவலும் காவல்துறை வட்டாரத்தில் கசிந்துள்ளது. இது காவல் உயர் அதிகாரிகளால் வைக்கப்பட்ட பரிந்துரை எனவும் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பட்சத்தில் இன்று முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளது.

இரண்டு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று பழையபடி 1.சென்னை காவல் ஆணையரகம், 2.புறநகர் ஆணையரகம் என 2 ஆக பிரிப்பது. இரண்டாவது பரிந்துரை சென்னையை மூன்று காவல் ஆணையரகமாக பிரிப்பது. 1. சென்னை காவல் ஆணையரகம், 2. ஆவடி காவல் ஆணையரகம், 3. தாம்பரம் ஆணையரகம் என மூன்றாக பிரிப்பது ஆகும்.

அதற்கு முன் சென்னையின் காவல் மாவட்டங்கள் குறித்து பார்ப்போம். சென்னையில் தற்போது நான்கு மண்டலங்கள் டிஐஜி அந்தஸ்து அதிகாரிகளால் நிர்வாகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்தின் கீழும் 3 துணை ஆணையர்கள் தலைமையில் காவல் மாவட்டங்கள் என மொத்தம் 12 காவல் மாவட்டங்கள் உள்ளன.

டிசி கண்ட்ரோல்

இதில் சென்னையில் கூடுதலாக 2 காவல் மாவட்டங்களை உருவாக்க ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏற்கெனவே இருக்கும் 1.வண்ணாரப்பேட்டை, 2. பூக்கடை, 3.மாதவரம், 4.திருவல்லிக்கேணி, 5.கீழ்ப்பாக்கம், 6. மயிலாப்பூர், 7.அடையாறு, 8.தி.நகர், 9.மவுண்ட், 10. அண்ணாநகர், 11.புளியந்தோப்பு , 12. அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்களுடன் புதிதாக 13.பூந்தமல்லி, 14.தாம்பரம் என கூடுதலாக உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உருவாக்கப்பட்டு சென்னை நகரை இரண்டாக பிரிக்கப்பட்டால் அதில் சென்னை காவல் ஆணையரகத்தில் 1.வண்ணாரப்பேட்டை, 2. பூக்கடை, 3.மாதவரம், 4.திருவல்லிக்கேணி, 5.கீழ்ப்பாக்கம், 6. மயிலாப்பூர், 7.அடையாறு, 8.தி.நகர், 9.அண்ணாநகர், 10.புளியந்தோப்பு என 10 துணை ஆணையர்கள் அடங்கியதாக அமையும்.

சென்னை புறநகர் ஆணையரகம் 1. அம்பத்தூர், 2.மவுண்ட் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 3.பூந்தமல்லி, 4.தாம்பரம் இணைந்து புறநகர் மாவட்டமாக அமையும் இதற்கு ஏடிஜிபி அந்தஸ்தில் காவல் ஆணையரும், ஒரு கூடுதல் ஆணையர் என அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் சென்னையை மூன்று காவல் ஆணையரகமாக பிரிப்பது என்றும் மொத்தமுள்ள 14 காவல் மாவட்டங்களில் 5,5,4 என்கிற விகிதத்தில் பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1. சென்னை காவல் ஆணையரகம், 2. ஆவடி காவல் ஆணையரகம், 3.தாம்பரம் ஆணையரகம் என இருக்கும் என்கிறார்கள்.

இன்று அறிவிப்பா?

இதில் சென்னை, தாம்பரம் இரண்டும் 5 காவல் மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும். ஏடிஜிபி அந்தஸ்த்தில் ஆணையர் இருப்பார், ஆவடி ஆணையரகம் 4 காவல் மாவட்டம் அடங்கிய நிலையில் ஐஜி அந்தஸ்த்தில் அதிகாரி இருப்பார் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு 1.திருவல்லிக்கேணி, 2.கீழ்பாக்கம், 3. மயிலாப்பூர், 4. புளியந்தோப்பு, 5.பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களும் , தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் 1. தாம்பரம், 2. மவுண்ட், 3. அடையாறு, 4. பூந்தமல்லி, 5.தி.நகர் ஆகிய காவல் மாவட்டங்களும், ஆவடி ஆணையரகத்தின் கீழ் 1.அண்ணாநகர், 2.அம்பத்தூர், 3. மாதவரம், 4.வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் மாவட்டங்களும் அடங்கும்.

மேற்கண்ட 2 பரிந்துரைகள் உள்ள நிலையில் இதில் எதையாவது ஒன்றை முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளது. அதையும் இன்று காவல்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அறிவிப்பு வருமா? அப்படி வந்தால் காவல்துறை வரலாற்றில் முக்கிய நாளாக இது அமையும்.

English summary
Separation of Chennai Police Commissionerate? Divide into 2 or 3? ..Is the announcement coming?

Source: https://tamil.oneindia.com/news/chennai/separation-of-chennai-police-commissionerate-divide-into-2-or-3-is-the-announcement-coming-432379.html