“மோசடி கும்பலிடம் சிக்க வேண்டாம்” – சென்னை காவல்துறை வேண்டுகோள் – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாப்பி, லசாடா, போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும்,  7 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வருகிறது. இந்த மெசேஜ் லிங்கை அழுத்தினால் உடனடியாக honey மற்றும் making என்ற செயலி பதிவிறக்கம் ஆகிறது. பின்னர் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மூலமாக பொதுமக்களுக்கு மோசடி நபர்கள் அறிவுரை வழங்கி அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள். முதற்கட்டமாக போனஸ் தொகை 101 ரூபாயும் மோசடி நபர்கள் அனுப்பி, அந்த ஆப் மூலமாக குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுகிறார்கள். அதற்கான கமிசன் தொகையும் பயனாளருக்கு கிடைக்கும் என நம்ப வைக்கிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பலர் மோசடி நபர் அளித்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி பொருளை வாங்கி விற்றுள்ளனர். ஆனால் கமிஷன் தொகையானது பயனாளரின் வங்கிக் கணக்கிற்கு வராமல் ஆப்பில் மட்டுமே இருப்பதாக காட்டப்படும். மேலும் மோசடி நபர்கள் கொடுக்கும் டாஸ்கை முழுவதுமாக முடித்தால் மட்டுமே தங்களது வங்கி கணக்கிற்கு பணம் வரும் என நம்ப வைத்து பின்னர் செலுத்திய பணத்தை மோசடி செய்வதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த மோசடியில் பொதுமக்கள் பலர் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர்.எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்க வேண்டாம் எனவும் உடனடியாக ஹனி மற்றும் மேக்கிங் என்ற செயலியை செல்போனில் இருந்து அழிக்குமாறு சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். குறுகிய காலகட்டத்தில் அதிக பணம் சம்பாதிக்களாம் என வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியோ விளம்பரத்தையோ நம்ப வேண்டாம் என சென்னை காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2021/09/10082106/2701721/Do-not-fall-prey-to-fraudulent-gangs–Chennai-Police.vpf