சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணிகள்: கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்…

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர், கோயம்பேடு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திருப்பி விடப்பட்டுள்ளது.

போரூர் செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம், 2-வது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, நேராக P.T. ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை, வன்னியர் சாலை வழியாக ஆற்காடு சாலையை அடையலாம்.

மாறாக கோயம்பேடு செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்புக்கு செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு சென்று அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து பவர் ஹவுஸ் சந்திப்பு வரை செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.  

இதேபோல் பவர் ஹவுஸ் சிக்னலில் இருந்து அசோக் நகர் காவல் நிலையம் வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அசோக் நகர் காவல் நிலையத்தில் இருந்து அம்பேத்கர் சாலை வழியாக பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெருக்கமான பகுதிகள் என்பதால், மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அதுவரை போலீசார் போக்குவரத்தை கண்காணித்து உதவ வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2021/09/15153537/2712085/chennai-metro-diversion-in-route.vpf