மெட்ராஸ் டே: வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் அடையாளங்கள்! | ஒரு குட்டி டூர் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னைப் பல்கலைக்கழகம்

இந்தியாவின் மிகப் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்றைக்கு சேப்பாக்கம் மெரினா, கிண்டி, தரமணி, மதுரவாயல், சேத்துப்பட்டு என ஆறு வளாகங்களைக் கொண்டு இயங்கிவரும் சென்னைப் பல்கலைக்கழகம் 87 துறைகளின் கீழ் இயங்கும் 230 படிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சினிமா ஆளுமைகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பல்துறை ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. மிக முக்கியமாக இந்திய மொழிகளிலேயே முதல்முறையாக, தமிழில் பேரகராதி ஒன்றை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. ஏழு பாகங்களாக வெளிவந்தது இது. முதல் பாகம் 4,351 பக்கங்களோடு, ஒட்டுமொத்தமாக 1,24,405 வார்த்தைகளைக் கொண்டிருந்தது பிரமிக்கத்தக்க சாதனை.

சென்னைப் பல்கலைக்கழகம்

ரிப்பன் மாளிகை

சென்னையின் ஏராளமான பழைமைகளைப் போலவே, சென்னை மாநகராட்சியும் பழம்பெருமை வாய்ந்த ஒன்றுதான். பிரிட்டனுக்கு வெளியே காமன்வெல்த் தேசங்களில் அமைந்த நகர நிர்வாக அமைப்புகளில் இரண்டாவது மிகப் பழைமையான நகர நிர்வாக அமைப்பு சென்னை மாநகராட்சிதான். 1688 செப்டம்பர் 29 அன்று தொடங்கப்பட்டது. நிலையான இடமின்றி, பல்வேறு இடங்களில் இயங்கிவந்த சென்னை மாநகராட்சிக்கு தனி கட்டடம் கட்ட நினைத்தார்கள். 1909 டிசம்பர் 11 அன்று ரிப்பன் மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றைய மதிப்பீட்டில் ரூ. 7.5 லட்சம் செலவில், 4 ஆண்டுகளில் உருவான இந்த ரிப்பன் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.டி.எஸ்.ஹார்ஸ். பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த, உள்ளாட்சியில் சுயாட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ரிப்பன் பிரபு நினைவாக இதற்குப் பெயர் சூட்டினார்கள்.

ரிப்பன் மாளிகை

ரிப்பன் மாளிகை

Source: https://www.vikatan.com/government-and-politics/literature/a-special-tour-of-madras-on-the-382nd-birthday-of-chennai