மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள்: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (செப். 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் வெள்ளநீர் இடர்பாடுகளின்றி வெளியேறும் வகையில், மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கூட்டங்கள் நடத்தி நகர்ப்புற உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில், 20.09.2021 முதல் 25.09.2021 வரை ‘மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்’ ஆக அறிவித்து, அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கமாக முன்னெடுத்து செயல்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில், மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு 20.09.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 695.31 கி.மீ. நீளமுள்ள 4,254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல், 948 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால்களில் சிறு பழுதுகளை சரிபார்த்து பராமரித்தல் மற்றும் 6,891 இடங்களில் உடைந்த நிலையில் உள்ள மனித நுழைவுவாயில் மூடிகளை மாற்றம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நாள்தோறும் மேற்பார்யிட்டு ஆய்வு செய்ய துணை ஆணையாளர்கள், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலகர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலந்தூர் மண்டலம், வார்டு-162, கண்ணன் காலனியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை இன்று (செப். 23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆணையர் பழவந்தாங்கல் சுரங்கப்பாதையை பார்வையிட்டு, பருவமழை காலத்தில் மழைநீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்விடத்தில், மழைநீர் வெளியேற ஏதுவாக ரயில்வே துறையின் சார்பில் அமைக்கப்பட வேண்டிய குறுக்கு சிறுபாலம் (Cross Culvert) குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், ஆதம்பாக்கம் ஏரியில் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளையும், தில்லை கங்கா நகர் 44-வது தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பெருங்குடி மண்டலத்தில் வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் மற்றும் ஆதம்பாக்கம் வீராங்கல் ஓடை ஆகிய இரண்டும் சேரும் இடம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வீராங்கல் ஓடை சேரும் இடம் ஆகிய பகுதிகளில் மிதக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல், தூர்வாரும் பணிகளையும் விரைந்து மேற்கொண்டு பருவ மழைக்கு முன்னதாக முடிக்க உத்தரவிட்டார்.

மேலும், பெருங்குடி மண்டலம் ராம்நகர் 8-வது குறுக்கு தெருவில் ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியுடன் கோவளம் வடிநில பகுதி ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஜெயச்சந்திரன் நகரில் புனரமைக்கப்பட்ட குளத்தினை பார்வையிட்டு நீர்நிலைகளை புனரமைத்து மறுசீரமைப்பு மேற்கொண்ட பணிகளுக்காக மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை பொறியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை திட்டமிடப்பட்ட பணிகளில் 469.07 கிமீ நீளமுள்ள 2,893 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளும், 69 சிறு பழுதுகள் நீக்கும் பணியும் முடிவுற்றுள்ளன. மேலும், 722 இடங்களில் மனித நுழைவு வாயில் மூடிகளும் மாற்றப்பட்டுள்ளன”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/719453-chennai-corporation-commissioner-inspection.html