34 ஆண்டுகளுக்கு முன் இறந்த அரசு ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

34 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அரசு ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருவாய் துறையில் பணியாற்றி வந்த தனது கணவர், 1988ம் ஆண்டு சாலை விபத்தில் பலியானதாக கூறி, கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வழங்க கோரி, ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ரோசா என்பவர் அரசுக்கு விண்ணப்பித்தார். அதே நேரத்தில் மற்றொரு பெண், அரசு ஊழியரின் மனைவி என கூறி கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரியதால், சட்டப்பூர்வ மனைவி யார் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வர அரசு அறிவுறுத்தியது.

இதன்படி, ரோசா, தன்னை சட்டபூர்வ மனைவி என அறிவிக்கக்கோரி 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரோசாவிற்கு சாதகமாக 2013ம் ஆண்டும் தீர்ப்பு வந்தது. இதையடுத்து, தன் மகன் பிரபாகரனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், 30 ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

image

இதை எதிர்த்து ரோசா மற்றும் பிரபாகரன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி நக்கீரன் அமர்வு, இத்தனை ஆண்டுகள் தாமததிற்கு மனுதாரரையோ அல்லது அரசையோ குறைக்கூற முடியாது என்றும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என்றும், அதனால் பிராபகரனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும், பிரபாகரனுக்கு தகுதிக்கேற்ப 3 மாதத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு என்பது ஒரு முன்மாதிரியாக கருதக்கூடாது ஏனெனில் இந்த உத்தரவு இவருக்கு மட்டும் தான் பொருந்தும் என்று தெரிவித்தனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/117087/madras–High-Court-has-ordered-the-Tamil-Nadu-government-to-provide-compassionate-work-to-the-son-of-a-civil-servant-who-died-34-years-ago