உலக வீடற்றோர் நாள்: சென்னையில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி – தினமணி

சென்னைச் செய்திகள்

உலக வீடற்றோர் நாளை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில், வருடந்தோறும் அக்டோபர் மாதம் 10ம் நாள் உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் சாலையோரம் வசிக்கும் தனிநபர்கள், மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடற்றோர் ஆகியோரை மீட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்க வைத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டின் உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம், சென்ட்ரல் இரயில்வே நிலையம், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், மெரீனா கடற்கரை, எழும்பூர் இரயில் நிலையம், ஆழ்வார்பேட்டை, வேப்பேரி, ஆகிய இடங்களில் சாலையோரம் வசிக்கும் தனிநபர்கள் மீட்டு மறுவாழ்வு அளிக்க விழிப்புணர்வு மற்றும் மீட்பு முகாம்கள் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுசுகாதாரத்துறையின் சார்பில் 13 ஆண்கள் காப்பகமும், 8 பெண்கள் காப்பகமும், 1 ஆண் பெண் காப்பகமும், 5 சிறுவர்கள் காப்பகமும், 3 சிறுமிகள் காப்பகமும், 3 மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகமும், 2 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகமும், 4 முதியோர் காப்பகமும், 1 அறிவுதிறன் குறைபாடுடைய சிறுவர்கள் காப்பகமும், 1 மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகமும், 1 திருநங்கைகள் காப்பகமும், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் உடனிருப்பவர்கள் தங்கும் 6 ஆண்கள் சிறப்பு காப்பகங்கள் மற்றும் 7 பெண்கள் சிறப்பு காப்பகங்கள் என 55 காப்பகங்கள் பொதுமக்களின் நலனுக்காக இயங்கி வருகிறது.

இதையும் படிக்க- மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை

இக்காப்பகங்களில் தற்போது 1,667 நபர்கள் தங்கவைக்கப்படுட்டு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்கள் அருகிலோ அல்லது வேறு ஏதேனும் பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் தனிநபர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பிற வீடற்றோர் வசிப்பதை அறிந்தால் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913, 94451 90472, 044-2530 3849 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் கிடைத்தவுடன் காப்பகப் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையோரம் வசிப்பவர்களை மீட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கி, காப்பகத்தில் தங்கவைத்து மறுவாழ்வு அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (கல்வி) திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/oct/10/world-homeless-day-awareness-bicycle-rally-in-chennai-3715439.html