சென்னையில் விடிய விடிய மழை.. கடலோர மாவட்டங்களிலும் கொட்டி தீர்த்தது.. ஸ்தம்பித்த ஊட்டி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை உட்பட தஞ்சை, நீலகிரி என தமிழகத்தின் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.. இதன்காரணமாக மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது… பல்வேறு மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழையின் தாக்கமும் நீடிக்கிறது.. இதனால் சில இடங்களில் கனமழை பொழிவு உள்ளதால், பல இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது..

இந்த மழைபொழிவானது, அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

'ஆரஞ்சு அலர்ட்..' கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு‘ஆரஞ்சு அலர்ட்..’ கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

கனமழை

அதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கடந்த 9ம் தேதி முதல் இன்று வரை 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய அல்லது பலத்த மழை பெய்யும் என்று கூறியிருந்தது. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது..

விடிய விடிய மழை

அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மற்ற மாவட்டங்களில், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னையிலும் நகரின் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்ற அறிவிப்பையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.

சென்னை

அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல கடலோர மாவட்டங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவும் மழை வெளுத்து வாங்கியது.. சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.. அதேபோல, புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, செங்குன்றம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் விடாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது.. இதில் உட்டி தலைமை அரசு மருத்துவமனையின் சுற்றுசுவர் இடிந்து விழுந்துவிட்டது.. அத்துடன் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டது.. மின்சாரமும் இல்லாமல் ஊட்டி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மழை நீர்

நேற்று மதியம், தஞ்சை மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது… தஞ்சை மருத்துவக் கல்லூரி, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், நாஞ்சிகோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களில் கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது.. கொள்ளிடம் பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

English summary
Heavy Rain fall in many districts including Chennai and Nilgiris

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-fall-in-many-districts-including-chennai-and-nilgiris-435650.html