சென்னை-குமரி தேசிய நெடுஞ்சாலையை 6, 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்: மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்தல் – தினமணி

சென்னைச் செய்திகள்

நான்கு வழிச்சாலையாக உள்ள சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை 6, 8 வழிச்சாலையாக மாற்றியமைக்கும் திட்டம் உள்பட 11 கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தில்லியில் அவரது அலுவலகத்தில் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
 இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
 தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சுமார் 500 கி.மீ. தூரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. அதை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் கோரப்பட்டது. கடந்த 2010-இல் தொடக்கி வைக்கப்பட்ட சென்னை துறைமுகம் – மதுரவாயில் இரு அடுக்கு உயர்நிலைச் சாலைப் பணியைத் தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினோம். மதுரை மேற்கு சுற்றுவட்டச் சாலை, கோவை அரைவட்டச் சாலை, கோவை-சத்தியமங்கலம் சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கு விரிவான திட்ட அறிக்கை பெற்று பணிகளைத் தொடங்க வேண்டும் என தனித் தனியாக மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், 4 வழிச்சாலையாக உள்ள சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் 8 புறவழிச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இவற்றையும் நான்கு வழிச் சாலைகளாக மாற்றிமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 சென்னை-குமரி சாலை: இதேபோன்று சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை உள்ள சாலை தற்போது 4 வழிச்சாலையாக உள்ளது. தமிழகத்தின் முக்கியச் சாலையான இதில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலும், அதிக விபத்துகளும் நடக்கின்றன.
 இதைக் கருத்தில் கொண்டு இந்தச் சாலையை மேலும் விரிவுபடுத்த மத்திய அமைச்சரிடம் கோரினோம். குறிப்பாக, சென்னையிலிருந்து திருச்சி வரை 8 வழிச் சாலையாகவும், திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரை 6 வழிச்சாலையாகவும் மாற்றும் திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதே சாலையில் அதிகப் போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வரும் செங்கல்பட்டு-தாம்பரம் வரையும், திருச்சி-துவாக்குடி வரையிலும் உயர்நிலைச் சாலை அமைக்கப்படவேண்டியதன் தேவை குறித்தும் விளக்கப்பட்டது.
 கடல் இணைப்புப் பாலம்: மேலும், மும்பையில் இருப்பதைப் போன்று, சென்னை துறைமுகம் முதல் திருவெற்றியூர் சந்திப்பு வரை “கடல் இணைப்புப் பாலம்’ அமைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம். மாநகராட்சி, நகராட்சிகளின் 10 கி.மீ. சுற்று எல்லைக்குள் சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது விதி. இதைச் சுட்டிக்காட்டி பரனூர், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று கோரப்பட்டது.
 தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சியில் வடக்கு-தெற்கு, கிழக்கு- மேற்கு சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் இணைவதால் திருச்சியில் பேருந்து முனையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
 இந்தச் சந்திப்பின் போது திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூர்-திருச்செந்தூர், கொல்லேக்கால்-கனூர், பழனி-தாராபுரம், ஆற்காடு-திண்டிவனம், கரூர்-பவானி, மேட்டுப்பாளையம்-அவிநாசி ஆகிய நகரங்களுக்கான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார் என்றார் அமைச்சர் எ.வ. வேலு.
 இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசின் தில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழக நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Source: https://www.dinamani.com/india/2021/oct/13/chennai—kanyakumari-national-highway-3716807.html