மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

அண்ணா நகர் மண்டலம், பாபா நகரில் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி உள்ளிட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

”தமிழ்நாடு முதல்வர் எதிர்வரும் பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள ஏதுவாக நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நீர்ப்பாசனத் துறை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொண்டு அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கமாக முன்னெடுத்து செயல்படுத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் 28.09.2021 அன்று வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொளத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 30 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ரூ.3220 கோடி மதிப்பீட்டில் , 769 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அண்ணா நகர் மண்டலம், வார்டு எண்- 94ல் பாபா நகரில் மழைக் காலங்களில் தேங்கும் வெள்ள நீரையும் மற்றும் அருகில் உள்ள பூம்புகார் நகர், ஜானகிராம் காலனி, எஸ்.ஆர்.பி. நகர், சீனிவாசா நகர், செந்தில் நகர் உமாமகேஷ்வரி நகர், செல்வி நகர், அஞ்சுகம் நகர், சரோஜினி நகர், ஐயப்பா நகர், கே.கே.ஆர்.கார்டன், பழனியப்பா நகர் ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரையும் வெளியேற்றும் வகையில் 33 கி.மீ. நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.102.18 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்ணாநகர் மண்டலம் வார்டு 94 மாநகரில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் ஆசிய வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் 4.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தினை அரசு முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி இன்று (30.10.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அம்பத்தூர் மண்டலம், வார்டு 83 தாதங்குப்பம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 100 அடி சாலையில் வார்டு 65, திருமலை நகர் பகுதியில் நெடுஞ்சாலை மழைநீர் வடிகாலிருந்து மழை நீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில்அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து 100 அடி நெடுஞ்சாலை மழைநீர் வடிகால்களிலிருந்து மழை நீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் செல்வதைத் தடுக்கும் வகையில் தில்லை நகர் முதல் பிரதான சாலை, செந்தில் நகர் 3வது பிரதான சாலை மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மதகு அமைக்கப்பட வேண்டிய இடங்களையும் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாநகர் மண்டலம் வார்டு 94 பாபா நகர்ப் பகுதியில் 99 சதவீதப் பணிகள் முடிவுற்று உள்ளன. இப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையர் மீதமுள்ள பணிகளையும் நாளைக்குள் முடித்து சாலைகளை சமன்செய்து மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/732429-rainwater-drainage-work-chennai-corporation-commissioner-s-inspection.html