நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40,54,038 உள்ளனர். ஆண்கள் 19,92,198 பேர், பெண்கள் 20,60,767 பேர், திருநங்கைகள் 1073 பேர் உள்ளனர். 

Chennai, First Published Nov 1, 2021, 11:51 AM IST

தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டங்களை நடத்திய தேர்தல் ஆணையர் பழனிக்குமார், மாவட்டங்களுக்கு நேரில் சென்று தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று  சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை அடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40,54,038 உள்ளனர். ஆண்கள் 19,92,198 பேர், பெண்கள் 20,60,767 பேர், திருநங்கைகள் 1073 பேர். சென்னையில் குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக 1,76,679 பேருடன் துறைமுகம் தொகுதி உள்ளது. சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக 3,15,502 பேருடன் வேளச்சேரி தொகுதி உள்ளது.

chennai draft voter list release

மேலும் 906 வாக்குச்சாவடி மையங்களில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதை அடுத்து சிறப்பு சுருக்கமுறை திருத்தம் காலத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தல், வாக்காளர் விவரம் திருத்தம் செய்தல் மற்றும் தொகுதிக்குள்ளேயே வசிப்பிட மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை, ஆவண ஆதார நகலுடன் இணைத்து, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டல அலுவலகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும்  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறப்பு முகாம்களுக்கும் மற்றும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு கொண்டு செல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர்கள் பட்டியலில் பொதுமக்கள் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் இப்பட்டியலில் 22,492 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் 25,515 வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated Nov 1, 2021, 11:52 AM IST

Source: https://tamil.asianetnews.com/politics/chennai-draft-voter-list-release-r1vqzy