தமிழகத்தில் விடாது தொடரும் கனமழை- சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக் கடல், இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகர உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தீபாவளி வரை கனமழை வெளுக்கும்வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தீபாவளி வரை கனமழை வெளுக்கும்

மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

இதனால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவுறுத்தி இருந்தது வானிலை மையம்.

9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தற்போதும் மழை தொடர்ந்து வருகிறது. விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர் மாவட்டங்களில் விடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை தொடருவதால் இன்று சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கொடைக்கானல் நகரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

ராஜபாளையத்தில் கன மழை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முகவூர் சேத்தூர், முறம்பு ,சத்திரப்பட்டி .உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாகபெய்த கனமழை காரணமாக ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில ஆற்று வெள்ளம் போல் சாலைகளில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் பண்டிகை காலம் என்பதால் சாலை ஓர வியாபாரிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

சென்னையில் மழை

சென்னை நகரிலும் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் மதுரவாயில், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலை நகர், தாம்பரம், சேலையூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சேத்பட்டு, போளூர், ஆரணி, செய்யாறு, செங்கம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,திண்டிவனம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

English summary
Due to heavy rains, schools in Villupuram and Cuddalore districts will be closed today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tn-schools-in-2-districts-to-remain-close-due-to-heavy-rain-437687.html