சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள்.. திக்குமுக்காடும் சென்னை.. இந்தாண்டும் பெருங்களத்தூரில் அதே நிலைதான் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தீபாவளியைச் சொந்த ஊர்களில் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குப் பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருங்களத்தூரில் வழக்கம் போல இந்த ஆண்டும் வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.

நாடு முழுவதும் வரும் வரும் வியாழக்கிழமை, நவ.4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சூப்பர் சாதனை.. நீட் தேர்வில் வெள்ளியங்காடு அரசுப் பள்ளியில் படித்த 3 மாணவர்கள் தேர்ச்சிசூப்பர் சாதனை.. நீட் தேர்வில் வெள்ளியங்காடு அரசுப் பள்ளியில் படித்த 3 மாணவர்கள் தேர்ச்சி

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், சென்னை போன்ற நகரங்களில் இருப்பவர்கள் வெளியூர்களுக்குச் செல்ல வசதியாக அதற்கு மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

4 நாட்கள் விடுமுறை

இதனை ஏற்றுத் தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளது.

சொந்த ஊர் படையெடுக்கும் பொதுமக்கள்

இந்நிலையில், இன்றைய தினமே தலைநகர் சென்னையில் இருந்து தீபாவளிப் பண்டிகைக்காகப் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயில் செல்லும் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் பேருந்துகள் ஊர்ந்து செல்கிறது. அதேபோல் சென்னை நூறடி சாலையிலும் பேருந்துகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது.

திக்குமுக்காடும் பெருங்களத்தூர்

சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெருங்களத்தூரில் வழக்கம் போல இந்த ஆண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.

நிரம்பி வழியும் பேருந்துகள்

பெரும்பாலான மக்கள் சொந்த ஊரை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. மேலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி, ஸ்ரீ பெருமந்தூர் சுங்கச்சாவடி, மேல் மருவத்தூர் அருகே உள்ள திண்டிவனம் சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி நேரத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதற்காக 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Diwali holidays heavy traffic jam in chennai city. chennai traffic latest updates in tamil.

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-traffic-jam-in-chennai-city-as-thousands-of-people-headed-back-to-hometown-437806.html