தீபாவளிக்கு மறுநாள் இப்படி இருக்காதே? சிந்திக்க வைத்த சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் இப்படி இருக்காதே? சிந்திக்க வைத்த சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை நேற்று வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காலை முதலே பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க இயலாமல் போனது.

ஆனால், சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் இரவில் மழை நின்றதால், மக்களும் மகிழ்ச்சியாக பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

முன்னதாக, தீபாவளியன்று சிலையில் விழும் பட்டாசுக் கழிவுகளை இரவோடு இரவாக சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் நேற்று இரவு முதலே துப்புரவுப் பணியை மேற்கொண்டு பல லட்சம் எடைகொண்ட பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வழக்கமாக, சென்னையில் தீபாவளிக்கு மறுநாள் சாலை முழுக்க பட்டாசுக் கழிவுகள் குவிந்திருக்கும். ஆனால், நேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள் பலரும் இன்று காலை தங்களது வீட்டு வாசல் சுத்தமாக பெருக்கப்பட்டு, குப்பையில்லாமல் இருப்பதைக் கண்டு நிச்சயம் ஆச்சரியமடைந்திருப்பார்கள்.

மழைக் காலம் என்பதால் பட்டாசுக் குப்பைகள் பலவும் சாலை ஈரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். அதையும் சுத்தமாகப் பெருக்கி சுத்தப்படுத்தியிருக்கும் சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/05/dont-be-like-this-the-day-after-deepavali-chennai-corporation-made-to-think-3729884.html