சென்னையில் வெளுத்த கனமழை- பாதிப்பு குறித்து தெரிவிக்க -1913, 04425619206, 04425619207, 04425619208 – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருவதால் திரும்பிய திசை எல்லாம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் உதவிகளுக்காக 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வங்க கடலில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!

மேலும் சென்னை மாநகரத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகரம் பெருமழையை எதிர்கொண்டிருக்கிறது.

வெளுத்த கனமழை

சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. சென்னை மாநகரின் பல பகுதிகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நகரின் பல சுரங்க பாதைகளில் மழைநீர் பெருமளவு தேங்கி இருப்பதால் அப்பகுதிகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் எங்கும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சுரங்க பாதைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை வெள்ள நீரை அகற்றுவதில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை பதிவு விவரம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ, வில்லிவாக்கத்தில் 19 செ.மீ, எம்.ஆர்.சி. நகரில் 15 செ.மீ, நந்தனத்தில் 15 செ.மீ, அண்ணா பல்கலைக் கழகத்தில் 14 செ.மீ, தரமணியில் 11 செ.மீ, மீனம்பாக்கத்தில் 9 செ.மீ, தாம்பரத்தில் 5 செ.மீ மழை என பதிவாகி உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆறுகளின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடருமாம்

சென்னை மழை தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னை முதல் நெல்லூர் வரை மேக கூட்டங்கள் நிறைந்து காணப்படுவதால் கனமழை தொடரும். சென்னை நகருக்கு 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. வடக்கு, மத்திய பகுதியை நோக்கி மழைமேகங்கள் திரண்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

சென்னை உதவி எண்கள்

இதனிடையே சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக உதவிகள் மற்றும் புகார்கல் தெரிவிக்க தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 9445477205 எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல்களை தெரிவிக்கலாம் என கூறியுள்ளது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

English summary
Due to Heavy Rain Heavy Rain, Chennai Corporation has announced help line numbers.

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-chennai-corporation-announces-help-line-numbers-438157.html