சென்னை பெருநகரில் விடிய, விடிய கனமழை – Polimer News

சென்னைச் செய்திகள்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளமென ஓடியது. 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் நேற்று மாலை வரை லேசான தூறல் மட்டும் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இடையில் சிறிது நேரம் மழை நின்றிருந்த போதும் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த மழை விடிய விடிய நீடித்தது. இதனால் பாரிமுனை, எழும்பூர், ராயப்பேட்டை, மெரினா காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளமெனத் தேங்கியது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் அது வலுப்பெற்று வட தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.polimernews.com/dnews/161175