heavy rain in chennai and suburban areas – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.  இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவ.7) விடிய விடிய கனமழை பெய்தது. சென்னையில் சென்ட்ரல், சைதாப்பேட்டை, எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16 சென்டி மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 14 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. 

படிக்க | வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: வடதமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு

மேலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை ஆகிய பகுதிகளிலும் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:

முன்னதாக தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

படிக்க | நவ.9-ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 

அதன் தொடர்ச்சியாக தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்க கடலில் புதிதாக உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந் தேதி (புதன்கிழமை) வரை அனேக இடங்களில் மழை தொடரும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/07/heavy-rain-in-chennai-and-suburban-areas-3730970.html