அடித்து நொறுக்கும் கனமழை.. சென்னையில் விமான சேவைகள் கடும் பாதிப்பு… பயணிகள் அவதி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 59 விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!

மழையின் பாதிப்பு மோசமாக இருக்கும் என்பதால், தலைநகர் சென்னைக்கு ரெட் அலர்டு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

சென்னை மழை

நேற்று இரவு தொடங்கி இன்றபு காலை வரை கனமழை பெய்தது. அதன் பிறகு சில மணி நேரம் மழை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. கிண்டி, தாம்பரம், வேளச்சேரி, எழும்பூர், வடபழனி என பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்களில் மரங்களும் சாலைகளில் விழுந்துள்ளன.

உதவி எண்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய உதவி எண்களையும் சென்னை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு சென்னையில் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் மிக மோசமான அளவுக்குத் தேங்கியுள்ளது. இதை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

விமானச் சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வரை பெரியளவில் விமானச் சேவை பாதிக்கப்படாமல் இருந்தது. கனமழை காரணமாக விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் சற்று தாமதமானாலும் கூட விமானச் சேவை பெரியளவில் பாதிக்கப்படாமல் இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் நிலைமை மோசமானது. விமான ஓடுதளத்தில் மழை நீர் அதிகம் தேங்கியதால் விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.

59 விமானங்கள்

சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், கத்தார் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 7 சர்வதேச விமானங்கள் 30 நிமிடங்களிலிருந்தது ஒரு மணி நேரம் வரையிலும் தாமதமாகக் கிளம்பின. அதேபோல உள்நாட்டு விமானங்களும் தாமதமாகக் கிளம்பின. ஒட்டுமொத்தமாக 59 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓடுபாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

என்ன காரணம்

இது குறித்து சென்னை விமான நிலையம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், லக்கேஜ்களை விமானங்களுக்குக் கொண்டு செல்லுவதில் ஏற்பட்ட காலதாமதம், கனமழையால் பயணிகள் சரியான நேரத்தில் வரமுடியாமல் போனது ஆகியவை காரணமாக விமானங்கள் புறப்படும் நேரத்தில் காலதாமதம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

English summary
Chennai airport operation affected due to rain. Chennai flood latest updates in tamil.

Source: https://tamil.oneindia.com/news/chennai/air-services-at-chennai-airport-have-been-severely-affected-due-to-heavy-rains-in-chennai-438201.html