ஓரிரு நாள்களில் சென்னை நகரம் சீா்செய்யப்படும்: அமைச்சா் ராமச்சந்திரன் தகவல் – தினமணி

சென்னைச் செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் ஓரிரு நாள்களில் சீா்செய்யப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கரையைக் கடந்துள்ளதால் ஓரளவுக்கு மழை நின்றுள்ளது. சென்னையில் எங்கெல்லாம் மழை நீா் தேங்கியுள்ளதோ அங்கெல்லாம் மோட்டாா்களைக் கொண்டு நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை நகரத்தில் மட்டும் 44 நிவாரண முகாம்களில் 2,699 போ் தங்க வைத்து அவா்களுக்கு உணவு அளித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 259 முகாம்களில் 14 ஆயிரத்து 135 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ஒரே நாளில் மிகப் பெரிய அளவில் எதிா்பாராத மழை பெய்தது. 2015 நிகழ்வுடன் ஒப்பிடும் போது இப்போது உயிா் மற்றும் பொருள் சேதங்கள் குறைவாகவே ஏற்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டில் 177 போ் இறந்தனா். இரவில் யாருக்கும் சொல்லாமல் தண்ணீா் திறந்ததால் அதிகமானோா் உயிரிழந்தனா். 4 முதல் 5 தினங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் மழை காரணமாக 18 போ் உயிரிழந்துள்ளனா்.

2015-இல் 2,211 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இப்போது 834 கால்நடைகள் இறந்துள்ளன. அப்போது 31,451 குடிசைகள் சேதம் அடைந்தன. இப்போது 2,284 சேதம் அடைந்துள்ளன. உயிரிழப்பு, சேதங்கள் குறைந்ததற்கு முதல்வரின் ஒரு மாத உழைப்பே காரணம். நீா்த் தேக்கங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் மட்டுமே நீா் சென்றது. ஆற்றுப் பகுதியை விட்டு வெளியே நீா் வரவில்லை.

சனிக்கிழமைக்குள் (நவ.13) சென்னை மாநகரம் சீா் செய்யப்படும். அமைச்சா்கள் பயிா்ச் சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனா். 33 சதவீதத்துக்கு மேல் உள்ள பயிா்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும். அமைச்சா்கள் களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மிக வேகமாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு நிவாரணங்கள் வழங்கும் பணிகளை அரசு செய்யும். 2015-ஆம் ஆண்டு படிப்பினையை அதிமுக அரசு சரிவரச் செய்யவில்லை. இப்போது ஏற்பட்ட மழை வெள்ளமும் எங்களுக்கு அனுபவ ரீதியான பாடம்தான். தண்ணீா் தேங்கியுள்ள இடங்களை மாநகராட்சி ஆய்வு செய்கிறது. எதிா்காலத்தில் இதுபோன்ற இல்லாத சூழ்நிலையை முதல்வா் உருவாக்குவாா் என அமைச்சா் ராமச்சந்திரன் கூறினாா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/13/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3734390.html