சென்னை நகரம் இன்னும் 2 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பும்: சென்னை மாநகராட்சி கமிஷனர் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரம் இன்னும் 2 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உறுதியளித்துள்ளார்.

கனமழை

வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்க கடலில் உருவான தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. அதிலும் 6-ந் தேதி நள்ளிரவு முதல் 7-ந் தேதி காலை வரை விடிய விடிய 23 செ.மீ. அதி கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் தொடர்ச்சியாக கனமழையும் பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தேங்கின. அவற்றை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும் சில முக்கியமான பகுதிகளில் இதுவரை மழைநீர் முழுவதுமாக அகற்றப்படாமல் இருக்கிறது. அதனை வெளியேற்றி அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், மாநகராட்சி துறை அதிகாரிகள், பணியாளர்களும், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2 நாட்களில் இயல்பு நிலை

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சென்னையில் கொளத்தூர் ஜவகர் நகர், சூளைமேடு, சித்தம்மாள் காலனி, தியாகராயநகர் உள்பட ஒருசில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டுவிட்டது. சென்னையை பொறுத்தமட்டில் மழை நீர் அகற்றப்பட்டு, 98 சதவீத அளவுக்கு இயல்பு நிலை திரும்பிவிட்டது. தற்போது மழை வெள்ளத்தால் சேதமான சாலைகளை சீரமைத்தல், துப்புரவு பணி உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது.

தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக 602 பம்புகள் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் சென்னை நகரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.

20 ஆயிரம் களப்பணியாளர்கள்

இதுதொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர் விஜயராஜ்குமார் கூறியதாவது:-

சென்னையில் மழை நீர் தேங்கிய 216 இடங்களில் சென்னை குடிநீர் வாரியம் தண்ணீர் அகற்றியிருக்கிறது. தேங்கிய மழை நீரை அகற்றுவதற்காக 20 ஆயிரம் களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர நடவடிக்கை

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் பகுதி (அடையாறு) செயற்பொறியாளர் புகழேந்தி கூறியதாவது:-

சென்னை குடிநீர் வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் 24 மணி நேரமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை, நீர் இரைக்கும் பம்புகள் மூலம் வெளியேற்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலும், சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/14020129/Chennai-city-to-return-to-normal-in-2-days-Chennai.vpf