சென்னையில் வடியாத தண்ணீர் : தேங்கியநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் கனமழை பெய்து ஐந்து நாட்களாகியும் தலைநகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் வடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தேங்கியநீர் வெளியேற்றும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை, 3 மின் மோட்டார்களை கொண்டு வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதேபோல சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலை வாணி மகால் சந்திப்பில், மழைநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. ராட்சத மின்மோட்டார்கள் மற்றும் 2 டிராக்டர்களை கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். சிட்கோ தொழிற்பேட்டை பிரதான சாலை மற்றும் பாதிப்பு அதிகமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டுர் ஏரிக்கு செல்லக்கூடிய நீர்வழி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் தொழிற்சாலைகளுக்குள் புகுந்துள்ளதாக விளக்கம் அளித்தார்.

சென்னை காசிமேட்டில் பலத்த காற்றால் சேதமடைந்த படகுகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட அப்பகுதியினர் 500 பேருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எடப்பாடி பழனிசாமி, தனியே நிவாரண உதவிகள் அளித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், தங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்றார்.

இதனிடையே மழைநீர் தேங்கிய 778 இடங்களில் 574 இடங்களில் முழுவதுமாக மழைநீர் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 522 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 69 நிவாரண முகாம்களில் மூன்றாயிரத்து 492 பேர் தங்கியுள்ளனர். மழைநீர் அகற்றும் பணியில் 726 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலை, தியாகராய நகர் திருமலை பிள்ளை சாலை அதிகளவு சேதமடைந்துள்ள நிலையில், அதனை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை காரணமாக தேங்கிய குப்பை கழிவுகளை தீவிர தூய்மை பணி மூலம் மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றிய பிறகு தூய்மைப் பணி மூலம் கழிவுகள் துரிதமாக அகற்றப்பட்டு வருவதாகவும், சனிக்கிழமை அன்று 5 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணா நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ள பிற நகராட்சிகளில் இருந்து 500 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மாநகராட்சிப் பூங்காக்கள் மற்றும் பொதுஇடங்களில் தேங்கியுள்ள மழைநீரினை முழுவதுமாக அகற்றவும், தோட்டக்கழிவுகளை அகற்றவும் பூங்கா துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், குளோரின் குறைவாக உள்ள பகுதிகளில் இதுவரை 20 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Must Read : தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 15) மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

மேலும், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் ஒரு குடும்பத்திற்கு 500 கிராம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படவுள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-intensity-of-work-to-drain-stagnant-rain-water-in-chennai-sur-613781.html