‘நீதிபதி சஞ்சிப் இடமாற்றம் தண்டனையாக கருதப்படுகிறது’ சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

நீதிபதி சஞ்சிப் பானர்ஜியின் இடமாற்றம் பரிந்துரை, பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. சென்னையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்ற கொலிஜியத்தை வலியுறுத்தி சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

அதில், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தாவுக்கும், தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயாவுக்கும் இடமாற்றம் செய்யப்படுதற்கான உத்தரவுகள் தண்டனைக்குரியவையாகக் கருதப்படுகின்றன. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நல்லதல்ல என வழக்கறிஞர் சங்கம் நடத்திய அவசர கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா தலையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு, சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் குறித்து செப்டம்பர் 16 ஆம் தேதி பரிந்துரைத்தது. ஆனால், அந்த பரிந்துரை நவம்பர் 9 ஆம் தேதி தான் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

அதே பரிந்துரையில், கொலிஜியம் குழு, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரைத்தது.

இதற்கிடையில், தனித்தனியாக, அரவிந்த் தாதர், பிஎஸ் ராமன், வி பிரகாஷ், நளினி சிதம்பரம் மற்றும் சதீஷ் பராசரன் உள்ளிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 31 மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதி பானர்ஜியின் இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி ரமணா மற்றும் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடித்ததில், “நீதிபதி பானர்ஜி தனது பதவியில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தையே கழித்துள்ளார். பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நிர்வாக மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டிலும் தனது செயல்பாடுகளை சிறப்பாக செய்துள்ளார். கோவிட் -19 தொற்றுநோய்களின் போது கூட ஆயிரக்கணக்கான வழக்குகளைத் தீர்த்து வைத்தவர். அவரை திடீரென இடமாற்றம் செய்வதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு சென்னையை சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதில், எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி பானர்ஜி இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவர் நவம்பர் 1, 2023 அன்று ஓய்வு பெற உள்ளார்.

நீதிபதி சஞ்சிப் பானர்ஜியின் இடமாற்றம் பரிந்துரை, பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. சென்னையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் இதுவரை கொலிஜியம் கருத்து தெரிவிக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/madras-bar-protests-chief-justice-sanjib-banerjee-transfer-369293/