சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! – Polimer News

சென்னைச் செய்திகள்

வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை மையம், கள்ளக்குறிச்சி மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

நாளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள வானிலை மையம் அம்மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வரும் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Source: https://www.polimernews.com/dnews/161882