இன்று மாலை தொடங்கும்..! நாளை வெளுக்கும்..! சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பெரு வெள்ளத்தில் மிதந்த சென்னை மாநகருக்கு மீண்டும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தொடங்கும் மழை நாளை அதிகனமழையாக நீடிக்கும் என்றும் 19ஆம் தேதி மழை படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் நவம்பர் 7ஆம் தேதி பெய்த கனமழையால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. அடுத்தடுத்து பெய்த அதிகனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

மழை சற்றே ஓய்வெடுத்த காரணத்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது என்றும் சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்... 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை - சூறாவளியும் வீசும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்… 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை – சூறாவளியும் வீசும்

வெள்ளநீர் வெளியேற்றம்

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை முறிந்து விழுந்த மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இன்றும் நாளையும் அதிகனமழை

இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நாளை நிலவ கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.

இடி மின்னலுடன் கனமழை

கள்ளக்குறிச்சி மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகனமழை கவனம்

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

எங்கெங்கு மழை

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

2 நாட்களுக்கு அடைமழை

சென்னையில் இன்று மாலை தொடங்கும் மழை படிப்படியாக அதிகரித்து நாளை அதி கனமழையாகி 19ம் தேதி படிபடியாக குறையும் என அவர் தெரிவித்தார். தலைநகரம் சென்னை ஏற்கனவே பெய்த மழையால் சிக்கி சின்னாபின்னமானது தற்போது மீண்டும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளதால் தாழ்வான தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Extreme levels of flood danger were announced in Chennai today. Balachandran, head of the Indian Meteorological Department’s Southern Region, said that the rains which started this evening will continue to be heavy tomorrow and will gradually decrease on the 19th.

Source: https://tamil.oneindia.com/news/chennai/rain-starts-this-evening-will-gradually-become-heavier-in-chennai-says-balachandran-439331.html