சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது இன்று (புதன்கிழமை) மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (வியாழக்கிழமை) தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தால் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்’டும் மேற்சொன்ன மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 20-ந் தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மேற்கு, தென் மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/17055357/Red-Alert-for-4-districts-including-Chennai-and-Tiruvallur.vpf