நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, ஆந்திரா மற்றும் தமிழக வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வருவதால், நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 10 மாவட்டங்களில் பெருமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரிக்கு பெரு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் பெருமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பெரு மழை முதல் அடிகப்படியான பெரு மழைக்கு வாய்ப்புள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் பெரு முதல் அதிகப்படியான பெரு மழையும், ஓரிரு இடங்களில் அதிகப்படியான பெரு மழையும் நாளை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கும் இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக நிறுத்தப்பட்ட நீலகிரி மலை ரயில், வரும் 30ம் தேதி வரை இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் சோதனை ஓட்டம் 23 நாட்களுக்கு பிறகு நடைபெற்றது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மலை ரயில் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

Must Read : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை : 9 இடங்களில் சோதனை சாவடிகள்

பாறைகள் அகற்றப்பட்டு தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. எனினும் ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், ரயில் சேவை இம்மாத இறுதி வரை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/red-alert-for-4-districts-including-chennai-on-november-18-sur-615635.html