சென்னை மட்டுமல்ல.. இந்த உள் மாவட்டங்களுக்கும் கனமழை காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வடதமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிதீவிர கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களில் ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடதமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

18 மாவட்டங்களில் 10க்கும் கீழ் சரிந்த கொரோனா.. இந்த 2 மாவட்டங்களில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை 18 மாவட்டங்களில் 10க்கும் கீழ் சரிந்த கொரோனா.. இந்த 2 மாவட்டங்களில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள்

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில், “வடதமிழக பகுதியில் மழை அதிகரிக்கும் முன், மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள உள் மாவட்டங்களில், நீலகிரி முதல் தூத்துக்குடி வரை பரவலாக மழை பெய்யும். கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களிலும், கன்னியாகுமரியின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால், மேற்கில் இருந்து தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைமேகங்கள் நகர்ந்து வருகின்றன.

நாளை என்னவாகும்

கடந்த 2-3 மணி நேரமாக நெல்லை- தூத்துக்குடி பெல்ட்டில் மிகத் தீவிரமான மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை இருபுறமும் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு இடையில் இருக்கும் மாவட்டங்களில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நாளைய தினம் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட உள்பகுதிகளில் மழை குறையும். கடலோர மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்” என பதிவிட்டுள்ளார்,

சென்னையில் என்ன நிலை

முன்னதாக சென்னை உட்பட வடதமிழக மாவட்டங்களில் பெய்யும் மழை குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை தொடங்கி நாளை மாலை வரை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 7, 11 தேதிகளைப் போலவே இப்போது சென்னையில் கனமழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி முழுவதுமாக சென்னை பெல்ட்டில் விழுகிறது. இன்று இரவு தொடங்கி காலை வரை நல்ல மழை பெய்யும்.

தென்சென்னை புறநகர் பகுதிகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, கடலூர், பாண்டிச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்யும். கடந்த 2 முறையும் தப்பித்த தென்சென்னை புறநகர்ப் பகுதிகளில் இந்த முறை கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம். இதனால் வடசென்னை முதல் வேலூர் வரையிலும், தென் சென்னையிலிருந்து கடலூர் வரையிலும் பரவலாக மழை பெய்யும்” என அவர் பதிவிட்டிருந்தார்

சென்னை மாநகராட்சி

முன்னதாக சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu weather Pradeep john latest post about rain warning. Chennai rains latest updates in tamil.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-says-districts-close-to-western-ghats-will-get-good-rain-439395.html