சென்னை: க்வாரன்டைனில் பெண் மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை கொடூரம்! -இரண்டு அரசு மருத்துவர்கள் கைது – விகடன்

சென்னைச் செய்திகள்

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய அரசு டாக்டர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கொரோனா வார்டில் பணிபுரிந்த சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தங்கியிருந்தார். அதே ஹோட்டலில் டாக்டர் வெற்றிச்செல்வன் (35) என்பவரும் தங்கியிருந்தார்.

தனியாக பெண் டாக்டர் இருந்தபோது அங்குச் சென்ற டாக்டர் வெற்றிச்செல்வன், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் டாக்டர், தி.நகர் துணை கமிஷனரிடம் புகாரளித்தார். அதன்பேரில் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸாரை விசாரணை நடத்தும்படி தி.நகர் துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து புகாரளித்த பெண் டாக்டர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டாக்டர் வெற்றிச் செல்வனை போலீஸார் கைது செய்தனர்.

இதைப்போல அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பணி மேற்கொண்டிருந்த இன்னொரு பெண் டாக்டர், தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருக்கும் டாக்டர் மோகன்ராஜ் (28) என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் மோகன்ராஜையும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் ஒரே நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு பெண் மருத்துவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் சக டாக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-doctors-arrested-in-sexual-harassment-case