அதிகனமழையிலிருந்து தப்பிய சென்னை: சிக்கியது எந்த மாவட்டம் தெரியுமா? – தினமணி

சென்னைச் செய்திகள்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சென்னையில் அந்த அளவுக்கு மழைப்பொழிவு ஏற்படவில்லை.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், சென்னையை போனால் போகட்டும் என்று விட்டுவிட்ட அந்த மழைமேகங்கள், விழுப்புரம் மாவட்டத்துக்கு தனது கருணை முழுதையும் கொட்டித்தீர்த்துள்ளது.

அதாவது, கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5 பகுதிகளில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் பகுதிகளில் தலா 22 செ.மீ. மழையும், மணம்ழுண்டியில் 21 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இது மட்டுமல்ல, விழுப்புரம் மாவட்டத்தில் முகையூரில் 20 செ.மீ. மழையும் ஆனந்தபுரத்தில் 19  செ.மீ. மழையும் விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், வானூர் பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.

இதன் காரணமாக, இன்று, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/19/chennai-escapes-heavy-rains-do-you-know-which-district-is-trapped-3738330.html