கனமழை: சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று காலை விட்டு விட்டு பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று இரவு மழை சற்று திசை மாறியதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருந்த அதி கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது. இந்த நிலையில் அதி கன மழை எச்சரிக்கை இந்த மாதத்தில் 2-வது முறையாக சென்னையில் திரும்ப பெறப்பட்டது.

ஆந்திரா நோக்கி நேற்று மழை சென்றதால், சென்னை தப்பியது.  இந்தாலும் இன்று காலை பெய்த கனமழை காரணமாக சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை  விட்டு விட்டு பெய்த மழையால்  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மீட்புப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் மற்றும் பிற துறையினரும் மீட்புப் பணியில் களத்தில் இறங்கினர்.

இந்நிலையில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தி.நகர், பசுல்லாசாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால்,ஜி.என்செட்டிசாலை–வாணிமஹால் சந்திப்பிலிருந்து பசுல்லா சாலை செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாகத் திருப்பிவிடப்படுகின்றன.

சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரியத்தினர், அண்ணா பிரதான சாலையில் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக கே.கே.நகர் ஜி.ஹெச்.க்கு எதிரே உள்ள அண்ணாபிரதான சாலையில், உதயம் திரையரங்கம் நோக்கிச் செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

சாந்தி காலனி 4-வது அவென்யூவில் மெட்ரோ கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருவதால், திருமங்கலம் செல்லும் வாகனங்கள் 3-வதுஅவென்யூவில் இருந்து 2-வதுஅவென்யூ நோக்கி திருப்பி விடப்படுகின்றன. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/20155609/Heavy-rain-Traffic-congestion-in-waterlogged-areas.vpf