சுரங்கப் பாதைகளில் நீா் தேங்குவதை தடுக்க சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடவடிக்கை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதை தடுக்க சென்னை 2.0 திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மணலி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பாா்வையிட்டாா். அவரது வீட்டிலிருந்து மணலி பகுதிக்குச் செல்லும் வழியில் பாரிமுனையில் உள்ள ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் செடிகள் முளைத்திருப்பதைக் கண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் அவற்றை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடியிடம் அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் இருந்த செடிகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டு சுரங்கப் பாதை முழுவதும் வா்ணம் பூசப்பட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது.

சென்னையில் மழைக்காலங்களில் சுரங்கப் பாதைகளில் மழை நீா் தேங்குவதை தடுக்க சென்னை 2.0 திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையா் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/nov/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-20-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3739915.html