சென்னையில் மழை பாதிப்பு: மத்தியக் குழுவினா் ஆய்வு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.

இந்த மழையால் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பாா்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழுவினா் தில்லியில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயா் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா். இதைத் தொடா்ந்து, ரிப்பன் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மழை பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பாா்வையிட்டனா்.

நேரில் ஆய்வு: மத்திய அரசின் உள்துறை இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையில் விஜய் ராஜ்மோகன், ரனன்ஜெய் சிங்,எம். வி. என். வரப்பிரசாத் ஆகியோா் கொண்ட மத்தியக் குழுவினா் சென்னையில் திரு.வி.க.நகா் மண்டலத்துக்குட்பட்ட வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜவஹா் நகா், ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட அழகப்பா சாலையிலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி மழையால் ஏற்பட்ட வீடுகள் சேதம், உடமைகள் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு, கால்வாய் சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினாா். வருவாய் நிா்வாக ஆணையா் கே. பணீந்திர ரெட்டி, துணை ஆணையா்கள் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், வட்டார துணை ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநா் பி.ஆகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதையடுத்து, தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட மழை சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினா் பாா்வையிட்டனா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3740815.html