சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

சென்னை,

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண தொகையை வழங்குவதற்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், முதல்கட்ட வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 79 கோடி வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனார்.

இதையடுத்து மத்திய அரசின் உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மத்திய நீர்வள அமைச்சக இயக்குனர் ஆர்.தங்கமணி, மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரனன் ஜெய்சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகிய 7 பேர் அடங்கிய மத்திய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்புவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னை வெள்ள பாதிப்பு புகைப்பட தொகுப்பு, வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர்.

2 குழுக்களாக பிரிந்து ஆய்வு

இந்தநிலையில் ராஜீவ் சர்மா, ஆர்.பி.கவுல் தலைமையில் தனித்தனியாக 2 குழுக்கள் பிரிந்து சென்று வெள்ள பாதிப்பு பகுதிகளை நேற்று பார்வையிட்டனர். அதன்படி ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவில் விஜய் ராஜ்மோகன், ரனன் ஜெய்சிங், எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அவர்கள் தங்கியிருந்த சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து நேற்று காலை 9.10 மணி அளவில் புறப்பட்டனர்.

கொட்டும் மழையில் ஆய்வு

அப்போது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. கொட்டும் மழைக்கு இடையே மத்திய குழுவினர் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

அவர்கள் முதலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு வீராசெட்டி தெருவில் சேத மதிப்பீட்டுக்கான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் சென்ற புளியந்தோப்பு சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனை காரில் இருந்தவாறு பார்வையிட்டபடியே மத்திய குழுவினர் சென்றனர்.

போலீசார் சமாதானம்

புளியந்தோப்பு வீராசெட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பெருமழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட இடங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் வராமல், இப்போது எதற்கு வந்துள்ளீர்கள்…’ என்று மத்திய குழுவினரிடம் கேட்பதற்காக சில பெண்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

பின்னர் மத்திய குழுவினர், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்பட தொகுப்பையும் பார்வையிட்டனர். அங்கு காலை 9.50 மணி முதல் 9.58 மணி வரை மத்திய குழுவினர் இருந்தனர். இதையடுத்துமத்திய குழுவினர் புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை சேதம் அடைந்திருப்பதை பார்வையிட்டனர்.

கொளத்தூர் தொகுதியில்…

அதன் பின்னர் மத்திய குழுவினர் திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் வந்தனர். அங்கு நடந்த ஜவகர்நகர் சிவ இளங்கோ சாலையில் மழைநீர் வடிகால்வாய் பாதை சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சாலையில் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு இப்பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு ஆழம் தண்ணீர் செல்கிறது? என்பதை மத்திய குழு உறுப்பினர் ரனன் ஜெய் சிங் கடப்பாரையை விட்டு ஆய்வு செய்தார். இந்த இடத்தில் காலை 11.05 மணி முதல் 11.18 மணி வரைமத்திய குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர்.

ககன்தீப் சிங் பேடி விளக்கினார்

ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் வருவாய் நிர்வாக கமிஷனர் கே.பணீந்திர ரெட்டி, தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுமேலாளர் என்.சுரேஷ் ஆகியோரும் ஆய்வில் பங்கேற்றனர்.

அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடியும் மத்திய குழுவினருக்கு வெள்ள பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.

வரதராஜபுரத்தில் ஆய்வு

சென்னையில் 4 இடங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் பகுதிக்கு மத்திய குழுவினர் சென்றனர். அங்கு குடியிருப்பு பகுதிக்குள் அடையாறு ஆற்றுநீர் செல்வதை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனை நேரில் பார்வையிட்ட மத்திய குழு, காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்பின்போது ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகைப்படங்களையும் ஆய்வு செய்தனர்

அப்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கி கூறினர். விவசாயிகள் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடமும் மத்திய குழுவினர் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு

அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்ற மத்திய குழு அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள சேதங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.

பின்னர் இலத்தூர் ஒன்றியம் வடபட்டினம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதன்பின்னர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு நேற்று மதியம் புதுச்சேரி புறப்பட்டு சென்றது. அங்கு தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது. அதனைத்தொடர்ந்து இரவில் அங்கேயே தங்கினர்.

இந்த குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.

குமரியில் மற்றொரு குழு

இதேபோல் ஆர்.பி.கவுல் தலைமையிலான மற்றொரு குழுவினர் சென்னையில் இருந்து விமான் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து காரில் கன்னியாகுமரி சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்பு புகைப்படங்களை பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பை சந்தித்த இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டனர். 10 இடங்களில் பார்வையிட முடிவு செய்த நிலையில் இரவு நேரமானதால் பாதியிலேயே மத்திய குழு திரும்பியது. இதே குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ள பாதிப்பு இடங்களை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வு நிறைவடைந்த பின்னர் மத்திய குழுவினர் ஒன்றிணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நாளை (புதன்கிழமை) சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/23053725/Central-team-inspected-Chennai-Kanchipuram-and-Chengalpattu.vpf