மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள்! சென்னை குடிநீர் வாரியம் தகவல் – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நவம்பர் முதல்வாரத்தில் இருந்தே  சென்னை உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  வங்கக்கடலில் குறைந்த காற்றத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இந்த மழைக்கு தலைநகர் சென்னை தாக்குபிடிக்காமல் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. ஏராளமானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்னும் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாத நிலையில் குடிதண்ணீரும் கலங்கலாக வருகிறது. இதனால், அதை குடிக்கும் மக்கள் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து,  மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள் வழங்கி வருகிறது தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை.

சென்னை மக்களுக்கு தினந்தோறும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும்,  11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 200 வார்டுகளில் 85 லட்சம் மக்களுக்கு 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக  தெரிவித்து உள்ளது.

மேலும், மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட  சென்னை பொதுமக்களுக்கு 15 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும்,  இதுவரை 7,25,000 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன்,  ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் நீரில் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

Source: https://patrikai.com/chlorine-tablets-distribution-for-flood-affected-chennai-people-chennai-metro-water-department-information/