சென்னை ஏர்போர்ட் – கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை; ரூ4000 கோடியில் வரைவு திட்ட அறிக்கை தயார் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai airport to kilambakkam metro project draft ready: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை; ரூ.4000 மதிப்பீட்டில் வரைவு அறிக்கை தயார்

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில், ரூ.4,000 கோடி மதிப்பீட்டிலான மெட்ரோ ரயில் பாதைக்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததும், மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிக்கப்படும் என வரைவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, விமான நிலையம்  முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வரையிலும் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆவது கட்டத்தில், ரூ.61, 843 கோடி செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதைகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, பல இடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில்,முதல் கட்டமாக, மாதவரம் பால்பண்ணை முதல் சி.எம்.பி.டி வரையிலும் மற்றும் மாதவரம் பால்பண்ணை முதல் தரமணி இணைப்பு சாலை வரையிலும் 52.01 கி.மீ., பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதே போல், கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான, 26.01 கி.மீ., மெட்ரோ பாதை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ பாதை விரிவாக்க திட்டத்தில், விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதால், தென்மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்வோர் சென்று திரும்ப மற்றும் அப்பகுதி மக்களின் வசதியை கருத்தில் கொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.

இது தொடர்பான வரைவு திட்ட அறிக்கை, ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனத்தால், தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், பணி துவங்கும் காலத்திலிருந்து, மூன்று ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, மெட்ரோ ரயில் சேவையை துவங்க முடியும் என கூறப்பட்டு உள்ளது. 10 மாதங்களுக்கு முன்பே, வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அதை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதில், மெட்ரோ நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

வரைவு திட்ட அறிக்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து, விரிவான முழு திட்ட அறிக்கை, தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதலுடன் பணிகள் துவங்கினால், விரைவில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை துவங்க வாய்ப்பிருப்பதாக, மெட்ரோ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வரைவு திட்ட அறிக்கையில் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை, நிலையங்களுக்கு இடையிலான துாரம், மேம்பால பாதையின் உயரம், நிலையங்களின் அமைவிடம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நிலையங்களின் அமைவிடம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. எனினும், நிலைய அமைவிடங்களை தேர்வு செய்து இறுதி செய்வது, அதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து ஆலோசிக்கிறோம். விரிவான ஆலோசனைக்குப் பின், இறுதி முடிவு எடுக்கப்பட்டு, நிறைவான திட்ட அறிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக பணிகள் துவங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வரைவு திட்ட அறிக்கையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான 15.4 கி.மீ., பாதையில், மொத்தம், 12 நிலையங்கள் அமைக்கலாம். உயர்த்தப்பட்ட நிலையங்கள், 8 மீட்டரில் இருந்து, 15 மீட்டர் உயரம் வரை மாறுபடும். இத்திட்டத்துக்கு, 4,000 கோடி ரூபாய் செலவாகும். திட்டம் துவங்கும் நாள் முதல், அடுத்த மூன்று ஆண்டுகளில் முழு பணிகளையும் முடிக்கலாம். இப்பாதை, விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் இடது பக்கம் அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-airport-to-kilambakkam-metro-project-draft-ready-373647/