பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னை கோட்ட ரயில் நிலையங்களில்.. பிளாட்பார கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக தாக்கம் ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து பல மாதங்கள் முடங்கியது. இதனை தொடர்ந்து சாலை போக்குவரத்து சீரடைந்து அனைத்து மாநிலமும் பஸ்கள் இயக்கி வருகின்றன.

இதேபோல் ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு முன்னதாக சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

பேரிடர் காரணமாக வேளாண்மை மற்றும் உணவு முறையில் பாதிப்பு: உலக நாடுகளுக்கு ஐ. நா எச்சரிக்கைபேரிடர் காரணமாக வேளாண்மை மற்றும் உணவு முறையில் பாதிப்பு: உலக நாடுகளுக்கு ஐ. நா எச்சரிக்கை

நடைமேடை கட்டணம்

இதேபோல் ரயில் நிலையங்ககளிலும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அதிக அளவில் ரயில் நிலையங்களில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் ரூ.10 ஆக குறைப்பு

வெளியூர்களுக்கு பயணம் செய்யும் உறவினர்களை ரயில் நிலையம் உள்ளே சென்று வழியனுப்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் மிகவும் குறைந்ததால் சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயில் இருந்து மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மிகவும் மகிழ்ச்சி

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பிரதான ரயில் நிலையங்களிலும், தாம்பரம், கிண்டி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதன்மூலம் பயணிகள் உறவினர்களை இனி எளிதாக ரயில் நிலையத்துக்குள் சென்று வழியனுப்ப வழிவகை ஏற்பட்டுள்ளது. இதேபோல் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்ட ரயில்களை மீண்டும் சாதாரண ரயில்களாக இயக்கும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வேயின் இந்த அறிவிப்புக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ”கொரோனா காலத்தில் ரயில்வே நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன்படி மீண்டும் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதற்கென தனி கவுண்டர் துவக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

English summary
Platform fares at railway stations under the Chennai railway line have been reduced from Rs 50 to Rs 10. public has also demanded that the trains, which were converted to express trains, be re-run as normal trains

Source: https://tamil.oneindia.com/news/chennai/platform-fares-have-been-reduced-at-chennai-divisional-railway-stations-440330.html