கோவில் சொத்துகளை முறையாக பயன்படுத்தாமல் இருப்பது தானமாக எழுதிவைத்தவர்களின் ஆத்மாவுக்கு செய்யும் பாவம்: ஐகோர்ட்டு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கோவில், பக்தர்கள் நலனுக்காக கோவில் சொத்துகளை அதிகாரிகளும், அறங்காவலர்களும் பயன்படுத்தவில்லை என்றால் அது சொத்துகளை தானமாக கோவில்களுக்கு எழுதிவைத்தவர்களின் ஆத்மாவுக்கு செய்யும் பாவம் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

குத்தகை

கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஸ்ரீதரன் என்பவர் 1960-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்தார். இந்த நிலையில் அந்த சொத்துகான வாடகையை ரூ.17 ஆயிரத்து 200 ஆக உயர்த்தி கடந்த 2016-ம் ஆண்டு கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீதரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் இதுவரை ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 200 வாடகை பாக்கி வைத்துள்ளார். அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

உயர்ந்த ஆத்மா

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தெய்வத்தின் சொத்தான கோவில் சொத்துகளை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தவறும்பட்சத்தில் அல்லது தனிநபர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும்போது, இந்த ஐகோர்ட்டு எந்த ஒரு எல்லைக்கும் சென்று சொத்துகளை பாதுகாக்கும்.

கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்துகளை கோவில்களுக்கு எழுதிவைத்த நபர்களின் உயர்ந்த ஆத்மா, அந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் பலன்கள் கோவிலுக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சென்றடையும் என்று நினைத்தது.

பாவச்செயல்

ஆனால் அந்த ஆத்மாவின் எண்ணத்துக்கு மரியாதை கொடுக்காதது, அதிகாரிகளும், அறங்காவலர்களும் அதற்கு செய்யும் மிகப்பெரிய பாவம்.

தெய்வத்தின் சொத்து

இந்த வழக்கு மட்டுமல்ல கோவில் சொத்துகள் தொடர்பான ஏராளமான வழக்குகளில் குத்தகைதாரர்கள் என்று கூறுவோரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதுபோன்ற ஆட்களுக்கு எதிராக அறநிலையத்துறை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையும் திருப்திகரமாக இல்லை. அவர்கள் ஏதோ ஒரு ஆதாயத்துக்காக கூட்டு சேர்ந்து விடுகின்றனர்.

இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தாம் தெய்வத்தின் சொத்தை தவறாக பயன்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடுகின்றனர். எனவே, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவின்கீழ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். மனுதாரர் குத்தகைக்கான ஆதார ஆவணங்களை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து, தகுந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/27215807/Sin-to-mismanage-temple-assetsMadras-HC.vpf