சென்னை மழைநீர் வடிகால் கட்டமைப்பில் மாற்றம்:10 செ.மீ., வரை எதிர்கொள்ள புது வடிவமைப்பு – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

தூர் வார வசதியாக அமைகிறது ‘மேன்ஹோல்’

சென்னையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பை தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட உள்ள மழை நீர் வடிகால்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, தற்போது மணிக்கு 7 செ.மீ., மழை பெய்தால் நீர் வடியும் வகையில் உள்ள கட்டமைப்பு, இனி 10 செ.மீ., மழைக்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது. மேலும், வடிகால்களை எளிதாக துார் வாரும் வகையில், 2.5 மீட்டர் இடைவெளியில், ‘மேன் ஹோல்’ எனப்படும் ஆள்நுழைவு குழி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், 387.39 கி.மீ., நீளத்தில், 471 பேருந்து சாலைகள், 5,524.61 கி.மீ., நீளத்தில், 33 ஆயிரத்து, 845 உட்புற சாலைகள் உள்ளன. இவற்றில், 1,894 கி.மீ., நீளத்தில், 7,351 மழைநீர் வடிகால்கள் உள்ளன.அதன்படி, சென்னை மாநகராட்சியில் 426 சதுர கி.மீ., பரப்பளவில், 32 சதவீதம் மட்டுமே மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது.இதில், அடையாறு, கூவம் ஆறுகளின் வடிநில பகுதிகளில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது. அதே வேளையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு போதிய அளவில் இல்லை.

உத்தரவு

இதனால் சோழிங்கநல்லுார், பெருங்குடி போன்ற மண்டலங்களை ஒருங்கிணைத்து, கோவளம் வடிநில பகுதி ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதே போல, மாதவரம், மணலி போன்ற மண்டலங்களை ஒருங்கிணைத்து, கொசஸ்தலை வடிநில பகுதி மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இதில், கோவளம் வடிகால் பணி நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தப்பட்டுள்ளது. கொசஸ்தலை வடிகால் பணி, 15 சதவீதம் முடிந்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில் அக்., 25ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்தது. இதில், நவ., மாதத்தில், 6 மணி நேரத்தில், 20 செ.மீ., மழை கொட்டியது. மேலும், அந்த மாதத்தில் மட்டும், 105 செ.மீ., அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத தொடர் மழையால், மாநகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின.

தி.நகர், மாம்பலம், திருவொற்றியூர், மணலி, கொளத்துார், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிய ஒரு வாரம் வரை ஆனது. இதில், தி.நகர், மாம்பலம் பகுதியில், மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருந்தும், நீர் வடியாமல், மோட்டார் பம்புகள் வாயிலாக மழைநீர் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சென்னையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில், மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தவும், இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்தி, வரும் காலங்களில், மழைநீர் தேங்காத அளவிற்கு கட்டமைப்பை உருவாக்கவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக, திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு பகுதியில், புவியியல் மேற்பரப்பிற்கு ஏற்ப, புதிய மழைநீர் வடிகால் 7.10 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. புளியந்தோப்பு பகுதியில் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால், மணிக்கு 2 முதல் 3 செ.மீ., மழை பெய்தால், அந்த நீரை வெளியேற்றும் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.

மாநகராட்சி திட்டம்

இதனால் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை ஆகிய பகுதிகளில் சிறு தெருக்களிலும், புவியியல் மேற்பரப்பிற்கு ஏற்ப மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. தற்போது வழக்கமாக 6 முதல் 7 செ.மீ., மழைநீர் வடிவதற்கு ஏற்ப கட்டப்பட்டு வரும் வடிகால் கட்டமைப்பு, இனி, 10 செ.மீ., மழைநீரை உள்வாங்கும் அளவிற்கு மாற்றம் கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது:
இந்தாண்டு பெய்த வரலாறு காணாத கனமழையால், வடிகால்களில் மழைநீர் வடியும் வேகம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, இனிவரும் காலங்களில், 10 செ.மீ., அளவில் மழைநீரை உள்வாங்கும் அளவில் வடிகால்கள் அமைக்கப்படும். இதில், மழைநீர் வடியும் அளவிற்கு, புவியியல் மேற்பரப்பிற்கு ஏற்ப ஏற்ற, இறக்கத்துடன் வடிகால் அமைக்கப்படும். சென்னையில், பழுதடைந்துள்ள பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் இணைப்பு இல்லாத மழைநீர் வடிகால் மற்றும் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இடத்திற்கு ஏற்ப, 8 முதல் 10 செ.மீ., மழைநீரை உள்வாங்கும் அளவிற்கு கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படும்.

புதிய மாற்றம்

தற்போதுள்ள மழைநீர் வடிகால்களில், ‘மேன்ஹோல்’ எனப்படும் ஆள்நுழைவு குழி, 5 மீட்டர் இடைவெளியில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, மழைநீர் வடிகாலில், மனிதர்கள் இறங்கி துார் வாரக்கூடாது. அதே வேளையில், அனைத்து மழைநீர் வடிகாலுக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகளுக்கு ஏதுவாக, 5 மீட்டரில் இருந்த ஆள்நுழைவு குழி இடைவெளி, 2.5 மீட்டராக குறைத்து, மழைநீர் வடிகால் கட்டமைப்பில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த திட்டத்திலும் மாற்றம்!

கொசஸ்தலை, கோவளம் வடிநில பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம், 3,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்று, பணிகள் நடந்து வரும் நிலையில், மழைநீர் வடிகால் கொள்ளளவை உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது, இந்த இரண்டு வடிநில பகுதி திட்டங்களுக்கும் பொருந்தும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பில் திடீர் மாற்றம் செய்யப்படுவதால், பணிகளில் எந்த தாமதமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– நமது நிருபர் –

Advertisement

Dinamalar iPaper

இந்தியா எல்லையில் பிறந்த குழந்தைக்கு 'பார்டர்' என பெயர் சூட்டிய பாக்., தம்பதி


இந்தியா எல்லையில் பிறந்த குழந்தைக்கு ‘பார்டர்’ என பெயர் சூட்டிய பாக்., தம்பதி(2)

முந்தய

கோவிட்டுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு


கோவிட்டுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு(1)

அடுத்து








வாசகர் கருத்து (15)



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2908061