சுதேசி மைக்ரோ பிராசசர் சவால்: சென்னை விஐடி அணிக்கு 4-ம் இடம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னையின் ’குயின்ப்ரோக்’ அணி புதுடெல்லியில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்பட்ட சுதேசி மைக்ரோ பிராசசர் சவாலில் (MeitY) 4-வது இடம் பிடித்து ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றுள்ளது.

ஸ்கூல் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கைச் சேர்ந்த ஏ.ஆர்.மிருணாளினி, எஸ்.ஸ்வேதா, எஸ்.வர்ஷா மற்றும் முனைவர் அ.அணிஸ் பாத்திமா ஆகியோர் அடங்கிய இக்குழுவை ஹெல்த்கேர் மேம்பாடு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த முனைவர் ஜான் சகாய ராணி அலெக்ஸ் வழிநடத்தினார்.

காலிறுதிப் போட்டியில் மொத்தம் 6,170 அணிகள் பங்கேற்றன. இவற்றில் 100 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டன. பின்னர் இறுதிப் போட்டிக்கு 30 அணிகள் தேர்வாகின. இந்த அணிகளில் 19 அணிகள் தொடக்க நிறுவனங்கள், 11 அணிகள் கல்வி நிறுவனங்கள் ஆகும். தமிழகத்திலிருந்து சென்னை விஐடியின் குயின்ப்ரோக் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது.

குயின்ப்ரோக் அணி உள்நாட்டு சக்தி செயலியின் உதவியோடு கருவுற்ற தாய்மார்களின் உடல் நலனைக் கண்காணிக்கும் பெல்ட் மற்றும் மொபைல் பயன்பாட்டை முன்மொழிந்தது. இந்த கருவி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமப்புற சுகாதார மையங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

விஐடி அணியின் கண்டுபிடிப்பை எஸ்.எப்.ஏ.எல். தலைமை நிர்வாக அதிகாரி முத்து சின்னசாமி பாராட்டினார். இறுதி நிகழ்வில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று, புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். சிறந்த 10 வெற்றியாளர்களுக்கு சுதேசி மைக்ரோ பிராசசர் சவால் செயலாளர் அஜய் சாவ்னி, கூடுதல் செயலாளர் ராஜேந்திர குமார் விருது வழங்கினர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/745847-chennai-vit-team.html